இந்தியாவில் இருக்கும் இருசக்கர வாகன உற்பத்தியாளர்களில் யமாஹா நிறுவனமும் ஒன்று. ஒரு காலத்தில் யமாஹாவின் ஆர்எக்ஸ்-100 இந்திய இளைஞர்களின் கனவு வாகனம். இப்போதும் அந்த பழைய ஆர்எக்ஸ்-100 பைக்குகள் விண்டேஜ் பைக்குகள் ரேஞ்சிற்கு விற்பனையாகின்றன. அதே போல் தான் 80 மற்றும் 90-களில் இந்திய சாலைகளில் கம்பீரமாக வலம் வந்த ரெட்ரோ ஸ்டைல் தான் யமாஹா ஆர்டி-350. டு ஸ்ட்ரோக் பைக்கான அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இப்போதும் அந்த பழைய மாடல் பைக்கை பொக்கிஷம் போல் பாதுகாத்து வைத்திருப்பவர்கள் ஏராளம். ஏன் நம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தல தோனி கூட அந்த பைக்கை இப்போதும் வைத்திருக்கிறார். அப்படி இந்திய இளைஞர்களின் மனதைக் கொள்ளையடித்த ஆர்டி-350 பைக்கை மீண்டும் களமிறக்க தயாராகி வருகிறது யமாஹா நிறுவனம். இந்த புதிய பைக்கை ஆர்இசெட்-350 என்ற பெயரில் அறிமுகம் செய்வதற்காக விண்ணப்பித்துள்ளது யமாஹா நிறுவனம்.
தற்போது உள்ள வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ற வகையிலும், தற்போது நடைமுறையில் இருக்கும் மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ற வகையிலும் இந்த பைக் இருக்கும் என்று கூறப்படுகிறது. பழைய யமஹா ஆர்டி 350 பைக்கில் 347 சிசி ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. இதன் பவர் அவுட்புட் 39 பிஹெச்பி-யாக இருந்தது. அந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருந்தது. அது 2 ஸ்ட்ரோக் இன்ஜின் ஆகும். ஆனால் புதிய மாடலில் 4 ஸ்ட்ரோக் இன்ஜின் வழங்கப்படலாம். இதுதவிர ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ட்ராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், அஸிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச், ட்யூயல் சேனல் ஏபிஎஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் போன்ற அதிநவீன வசதிகளும் வழங்கப்படலாம்.
இந்திய சந்தையில் இந்த பைக் களமிறக்கப்பட்டால் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 350 சிசி பைக்குகளுக்கு நிச்சயம் பெரிய அளிவில் போட்டியை ஏற்படுத்தும். குறிப்பாக சொல்லப் போனால் ராயல் என்பீல்டு கிளாசிக் 350, ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மற்றும் ராயல் என்பீல்டு புல்லட் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இந்த ஆர்இசட்-350 இருக்கலாம். இதுதவிர ஹோண்டா ஹைனெஸ் சிபி350, ஜாவா மற்றும் யெஸ்டி மாடல்களும் போட்டியைச் சந்திக்கும் நிலை வரலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Yamaha, Yamaha bike