இந்தியாவின் ஃபேவரைட் வாகனங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றில் டிவிஎஸ் தயாரிப்பான ஸ்கூட்டி பெப்பிற்கும் இடமுண்டு. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஸ்கூட்டி பெப் பிளஸ் மிக லாவகமாக சென்று திரும்பும். இதனாலேயே பெண்களும் முதியவர்ளும் அதிக அளவில் ஸ்கூட்டி பெப்பை விரும்புவார்கள். ஃபெதர் வெயிட் ஸ்கூட்டி என்று செல்லமாக அழைக்கப்படும் பெப் பிளஸ் குறைவான எடையை கொண்டதால் கையாள மிகவும் எளிது. அதன் ஒட்டுமொத்த எடையே 98 கிலோ தான். இந்த இலகு ரக எடையும், சிம்பிளான உருவமும் தான் ஸ்கூட்டி பெப்பை பெண்களின் ஃபேவரைட் ஸ்கூட்டராக மாற்றியிருக்கிறது.
மார்க்கெட் போக, குழந்தைகளை பள்ளிக்கு கூட்டிச் செல்ல, அடுத்த தெருவில் இருக்கும் உறவினர்களை பார்க்கச் செல்ல என நம் அன்றாட நடவடிக்கைகளின் அங்கம் என்றே சொல்லலாம் ஸ்கூட்டி பெப்பை. அப்படிப்பட்ட நம் செல்ல வாகனம் தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளப் போகிறது. ஆம். விற்பனையில் இருந்து ஸ்கூட்டி பெப் பிளஸ்-ஐ முற்றிலுமாக நிறுத்த டிவிஎஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன் வெளியேற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், புதிய பிஎஸ் 6-ன் இரண்டாம் கட்ட மாசு உமிழ்வு விதிகளே மிக முக்கியமான காரணம். புதிய விதியால் அனைத்து புதிய வாகனங்களின் விலையும் கணிசமாக உயர்ந்திருக்கின்றது. இந்த நிலை ஸ்கூட்டி பெப் பிளஸுக்கு சரிபட்டு வராது என்கிற கண்ணோட்டத்திலேயே அதை வெளியேற்றும் முயற்சியில் டிவிஎஸ் களமிறங்கி இருக்கின்றது.
அதாவது, புதிய விதிகளுக்கு ஏற்ப ஸ்கூட்டி பெப் பிளஸ்ஸை அப்கிரேட் செய்வதனால் அதன் விலை கணிசமாக உயரும். இந்த விலை உயர்வு விற்பனையை கண்டிப்பாக பாதிக்கும். எனவே, புதிய விதிகளுக்கு ஏற்ப ஸ்கூட்டி பெப் பிளஸ்ஸை அப்கிரேட் செய்வது எந்த வகையிலும் பலனளிக்காது என்பதால் அதன் விற்பனையை நிறுத்தும் முடிவை எடுத்துள்ளது டிவிஎஸ் நிறுவனம்.
ஏற்கனவே ஸ்கூட்டி பெப் பிளஸ்ஸின் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டு விட்டது.
ஆனாலும் ஸ்டாக் உள்ள வரை ஸ்கூட்டி பெப் பிளஸ்ஸை விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டி பெப் பிளஸ் வெளியேற்றம் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் டிவிஎஸ் நிறுவனம் வெளியிடவில்லை. ஆனாலும், இது குறித்த நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகிக் கொண்டு தான் இருக்கிறன. இந்த தகவல் வெளியான பிறகும் ஸ்கூட்டி பெப் பிளஸ் விற்பனையாகிக் கொண்டு தான் இருக்கின்றன.
இளம் பெண்களின் செல்ல ஸ்கூட்டராக, பட்டாம் பூச்சி போல பல கண்கவர் வண்ணங்களில் நம் சாலைகளில் வலம் வந்த ஸ்கூட்டி பெப் பிளஸ்-ஐ இனி சாலைகளில் காண்பது அரிதாகத் தான் இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.