புல்லட்.. இந்த வார்த்தையை மட்டுமல்ல அந்த வண்டியையும் விரும்பாதவர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு இந்திய சாலைகளில் கம்பீரமாக வலம் வரும் பைக் புல்லட். அதன் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பல வேரியண்டுகளில் பைக்குகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
சென்னையை தலைமையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை, சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் இரு சக்கர வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதோடு, உலக நாடுகள் அனைத்திற்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. தற்போதைய நிலவரப்படி 40க்கும் அதிகமான நாடுகளில் இந்த நிறுவனம் வர்த்தக பணிகளை மேற்கொண்ட வருகின்றது. இதனால் தன்னுடைய உற்பத்தி திறனையும், வெளிநாட்டு சந்தையையும் விரிவுப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
250 சிசி முதல் 750 சிசி வரையிலான திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் தனது புதிய அசெம்பிளிங் ஆலைகளை நமது அண்டை நாடான நேபாளம் மற்றும் வங்க தேசத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளது. புதிதாக தொடங்கப்பட உள்ள அசெம்பிள் ஆலைகளால் உலக நாடுகளில் இந்த பைக்கிற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு இரு மடங்காகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதையும் படிக்க : பெட்ரோல், டீசல் இனி இல்லை.. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி - அரசின் அதிரடி முடிவு!
தற்போதைய நிலவரப்படி ராயல் என்பீல்டு நிறுவனம், ஆயிரக் கணக்கில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு மோட்டார்சைக்கிள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் இந்நிறுவனம் 12,351 யூனிட்டு மோட்டார் சைக்கிள்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. இதே நிறுவனம் 2023 பிப்ரவரியில் வெறும் 7,108 மோட்டார் சைக்கிள்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது.
ஒரே மாதத்தில் 73.76 சதவீதம் ஏற்றுமதி வளர்ச்சியை ராயல் என்பீல்டு சந்தித்து இருப்பது தெளிவாக தெரிகின்றது. மேலும், உள்நாட்டு சந்தையில் ராயல் என்பீல்டு இருசக்கர வாகன விற்பனை லேசாக சரிந்துள்ளது. 59,884 யூனிட்டுகள் மட்டுமே 2023 பிப்ரவரியில் விற்பனையாகி இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே வெளிநாட்டு சந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக வெளிநாடுகளில் அசெம்பிள் செய்யும் பணியைத் தொடங்கி இருக்கின்றது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.
இப்போதைய நிலவரப்படி ராயல் என்பீல்டு தயாரிப்புகளுக்கு வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. 650 சிசி வாகனங்களுக்கே உலக சந்தையில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. ட்வின்ஸ் பைக் என கருதப்படும் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் 650 ஆகியவற்றிற்கு வெளிநாட்டவர்கள் பைக் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதுதவிர, புதிதாக களமிறக்கப்பட்டு இருக்கும் சூப்பர் மெட்டியோர் 650 பைக்கிற்கும் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Bike Riders, Royal enfield