இந்தியாவின் முன்னோடி வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து கவாஸகி நிறுவனம் பைக்குக்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது. பஜாஜ் நிறுவனம் தனியாக பிரிந்த பிறகு சொல்லிக் கொள்ளும்படியாக கவாஸகி நிறுவனம் தனது தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்யவில்லை. அந்தக் குறையை போக்கும் விதமாக கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழித்து இப்போது புதிய க்ருஸர் ரக பைக்கை அறிமுகம் செய்துள்ளது கவாஸகி நிறுவனம். இந்த பைக் ஜப்பானின் ஒசாகாவில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த பைக்கின் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
கவாஸாகி எலிமினேட்டர் 400 என்ற பெயரில் அறிமுகமாகியிருக்கும் இந்த பைக் ஸ்டாண்டர்டு மற்றும் எஸ்இ ஆகிய 2 வேரியன்ட்களில் கிடைக்கிறது. முதலில் அதன் எஞ்சினை பற்றித் தெரிந்து கொள்வோம். புதிய கவாஸாகி எலிமினேட்டர் 400 பைக்கில் 399 சிசி லிக்யூட் கூல்டு, பேரலல் ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் கவாஸாகி நின்ஜா 400 பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் 48 பிஎச்பி பவரையும் 37 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. கவாஸாகி எலிமினேட்டர் 400 பைக் கவாஸாகி நின்ஜா 400 பைக்கை விடச் சற்று பவர்ஃபுல்லானது. மேலும் இது க்ரூஸர் ஸ்டைல் பைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் லோ எண்ட் டார்க்கிலும் அதிக பவரை வெளிப்படுத்தும். இந்த புதிய கவாஸாகி எலிமினேட்டர் 400 பைக்கில் 12 லிட்டர் ஃப்யூயல் டேங்க் உள்ளது. இந்த கவாஸாகி எலிமினேட்டர் 400 பைக்கை பொருத்தவரை முன்பக்கம் 310 மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்கம் 240 மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பிரேக் டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது போக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டெலஸ்கோபிக் ஃபிரண்ட் சஸ்பென்சன், ட்வின் ரியர் ஷாக் அப்சர்பர்கள், முக்கியமாக டாப் வேரியன்டான எஸ்இ வேரியன்ட்டில் முன்பக்கம், பின்பக்கத்தில் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கேமரா டேஷ் கேமரா போல வேலை செய்யும். தற்போது கவாஸாகி நிறுவனம் எலிமினேட்டர் 400 பைக்கை தற்போது ஜப்பான் மார்கெட்டில் மட்டும் விற்பனை செய்து வருகிறது. ஸ்டாண்டார்டு வேரியன்ட் பைக்கின் விலை இந்திய மதிப்பில் ரூ4.71 லட்சம் என்றும், டாப் வேரியன்டான எஸ்இ மாடலின் விலை ரூ5.33 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இந்த கவாஸாகி எலிமினேட்டர் 400 பைக் ஹோண்டா ரிப்பெல் 500 பைக்கிற்கும், இந்தியாவில் ராயல் என்ஃபீல்டிற்கும் கடும் போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.