ஜப்பானைச் சேர்ந்த இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா அனைத்து விதமான பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை தயாரித்து இந்தியாவில் வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறது. ஆனால், அந்நிறுவனம் சார்பில் இதுவரை எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் செய்யப்படவில்லை. ஹோண்டாவின் போட்டி நிறுவனமான ஹீரோ நிறுவனம் ஏற்கனவே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வரும் நிலையில் ஹோண்டா நிறுவனத்திற்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இதையடுத்து, இந்திய எலக்ட்ரிக் டூவீலர் சந்தைக்கான தனது முதற்கட்ட திட்டங்களை ஹோண்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி இந்தியச் சந்தையில் 2 புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஹோண்டா நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளது.
ஏற்கனவே வெளியான தகவல்களின்படி, ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கழற்றி மாற்ற முடியாத வகையிலான பேட்டரியை கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அனேகமாக இது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கலாம். ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் (Honda Activa Electric) என்ற பெயரில் இது விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹோண்டா நிறுவனத்தின் 2வது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கழற்றி மாற்றிக்கொள்ளக் கூடிய வகையிலான பேட்டரியை பெற்றிருக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே சார்ஜ் செய்வதற்குக் காத்திருக்காமல் ஸ்டேண்ட்பை பேட்டரியை முன்னரே சார்ஜ் செய்து வைத்துக் கொண்டு அந்த பேட்டரியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இரு சக்கர வாகனங்களுக்கு பேட்டரி சார்ஜ் செய்வதற்காக இந்தியா முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில், பேட்டரிகளை மாற்றிக் கொள்ளும் மையங்களை அமைக்கும் பணியில் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. கர்நாடக மாநிலம் நர்சபுரா பகுதியில் உள்ள ஹோண்டா ஆலையின் 'இ' உற்பத்தி பிரிவில் ஹோண்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் டூவீலர்கள் அனைத்தும் உற்பத்தி செய்யப்படவுள்ளது.
Also Read : புதிய எஸ்யூவி ரக காரை களம் இறக்கும் சிட்ரோயன்..! - ஏப்ரல் 27-ல் இந்தியாவில் அறிமுகம்!
வரும் 2030ம் ஆண்டிற்குள், 10 லட்சம் எலெக்ட்ரிக் டூவீலர்களை உற்பத்தி செய்யக்கூடிய திறனை இந்த ஆலை பெற்றிருக்கும். எலெக்ட்ரிக் டூவீலர்களை சர்வீஸ் செய்வதற்கு வசதியாகத் தனது ஒரு சில சர்வீஸ் சென்டர்களை, ஒர்க்ஸாப் 'இ'-ஆக ஹோண்டா நிறுவனம் மாற்றவுள்ளது. இந்த பிரத்தியேகமான சர்வீஸ் சென்டர்களில், ஹோண்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் டூவீலர்கள் மட்டும் பழுது பார்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி, 2024ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடையும் நிதியாண்டிற்குள் இந்த 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் இந்தியச் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்தியச் சாலைகளில் ஹோண்டா நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர்கள் வலம் வர வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Electric bike, Scooters