தாய்லாந்தில் உள்ள பாங்காக் நகரில் தற்போது 44-வது சர்வதேச வாகன கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் உலகின் முக்கியமான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் ஹோண்டா நிறுவனமும் தனது புதிய வாகனம் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. அது தான் சூப்பர் கப் 125. ஆனால் லிமிடெட் எடிசனாக இந்த பைக் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் வெறும் 100 வாகனங்களை மட்டுமே தயாரிக்க உள்ளது ஹோண்டா நிறுவனம்.
அதென்ன சிறப்பு அப்படி என்கிறீர்களா? ஆம் உண்மையிலேயே இது ஸ்பெஷல் எடிசன் பைக் தான்.
உலகப் புகழ்பெற்ற பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி நிறுவனம் தனது நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இந்த நிகழ்வை பெரும் கொண்டாட்டமாக அது கொண்டாடி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை வெகு விமரிசையாகக் கொண்டாடும் நோக்கில் டிஸ்னி நிறுவனம் ஹோண்டா மற்றும் கப் ஹவுஸ் தாய்லாந்து உடன் கைகோர்த்து, தங்கள் நிறுவனத்தின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் புதிய வாகனம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்தது. அந்த முடிவின் பலன் தான் சூப்பர் கப் 125. இந்த லிமிடெட் எடிசன் சூப்பர் கப் 125 பைக்கை ஹோண்டா நிறுவனம் பாங்காக் சர்வதேச வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்திருக்கிறது.
இது பார்ப்பதற்கு பழைய பஜாஜ் தயாரிப்பான எம்-80-யைப் போலவே இருக்கிறது. ஆனால் சூப்பரான பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் இருக்கின்னறன. டிஸ்னியின் புகழ்பெற்ற கார்டூன் கதாப்பாத்திரங்களில் ஒன்றான மிக்கி மவுஸ் கிராஃபிக்குகள் சூப்பர் கப்-125-ல் இடம் பெற்றிருக்கின்றன. இதுதவிர டிஸ்னி 100 எனும் பேட்ஜும் அதில் இடம் பெற்றிருக்கின்றது. இந்த சிறப்பு பதிப்பிற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக ஆங்காங்கே குரோம் பூச்சுக் கொண்ட அலங்காரப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இத்துடன், சேடின் பிளாக் நிறம் இருசக்கர வாகனத்தின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இது சூப்பர் கப் 125க்கும் சூப்பர் ஸ்டைலான தோற்றத்தை வழங்கியுள்ளது. இதுபோன்று இன்னும் பல அழகு சேர்க்கக் கூடிய அம்சங்களை இந்த இருசக்கர வாகனத்தில் ஹோண்டா வாரி வழங்கி இருக்கின்றது. கூடுதல் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்ற காரணத்தினால் இதன் விலையும் சற்று கூடுதலாகக் காட்சியளிக்கின்றது.
ஹோண்டா சூப்பர் கப்125 பைக் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2.81 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதோடு விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் கப்125-ன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Honda