உலக அளவில் மிகப்பெரிய சவால் சுற்றுச்சூழல் மாசு தான். எந்த அளவிற்குத் தொழிற்சாலைகள் மற்றும் பசுமைக்குடில் வாயுக்களால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுகிறதோ, அதற்குச் சற்றும் குறைவில்லாமல் வாகனப் போக்குவரத்தும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தான் மாசு ஏற்படுத்தாத வாகன பயன்பாட்டிற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளன. இனி வரும் வாகனங்களைச் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கலாம். ஆனால் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் வாகனங்களை என்ன செய்வது? இதற்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் ஸ்கிராப்பிங் பாலிசி. அதாவது பதினைந்து ஆண்டுகள் பழமையான வாகனங்களை அழிப்பது தான் இந்த திட்டம்.
பத்து ஆண்டுகள் ஆன டீசல் வாகனங்களையும், 15 ஆண்டுகள் ஆன பெட்ரோல் வாகனங்களையும் சாலையில் இயக்கத் தடையும் விதிக்கப்பட்டது. ஆனாலும், யாரும் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து தான் ஸ்கிராப்பிங் பாலிசி என்ற திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. ஆனாலும் இந்த திட்டத்தையும் எந்த மாநிலமும் நடைமுறைக்குக் கொண்டு வரவில்லை. முன்னோடியாக டெல்லி அரசு இந்த திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.
கடந்தாண்டு டில்லியில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட டீசல் வாகனங்கள், மற்றும் 15 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட பெட்ரோல் வாகனங்களின் பதிவெண்களைப் பதிவிலிருந்து நீக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் அவர்கள் தங்கள் காரின் பதிவு எண்ணை இழப்பார்கள். இதனால் காரை வெளிமாநிலங்களுக்கு விற்கவோ, டெல்லி சாலைகளில் இயக்கவோ முடியாது. மீறி சாலையில் அந்த வாகனங்களை ஓட்டும் போது, வாகன தணிக்கையில் சிக்கினால் சிக்கல் தான். நிலைமை இப்படியிருக்க, இப்போது ஸ்கிராப்பிங் பாலிசியை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.
இந்த கொள்கையின் படி, வாகன தணிக்கையில் பழைய வாகனங்கள் மாட்டினால் அதன் பதிவு ரத்து செய்திருப்பதை போலீசார் உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். அரசிடம் உள்ள பதிவின்படி மொத்தம் 53,78,514 தகுதியிழந்த வாகனங்கள் டில்லியில் இயங்கி வருகிறது. இதில் 80 ஆயிரம் வாகனங்கள் அரசுக்குச் சொந்தமான வாகனங்கள். அவை மாற்றப்பட்டு விட்டன அல்லது பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது.
Also Read : ஹோண்டா ஆக்டிவாவின் புதிய மாடல்.. அசத்தல் விலையில் அறிமுகம்... இவ்வளவு சிறப்பம்சங்களா?
அப்படித் தகுதியிழந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவது வாகன தணிக்கையில் கண்டறியப்பட்டால் அந்த வாகனத்தை ஸ்கிராப்பிங் சென்டருக்கு கொண்டு சென்று ஸ்கிராப் செய்து விடுகின்றனர் காவல்துறையினர். முன்னர் இப்படியான வாகனத்தைப் பயன்படுத்தியதற்காக அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி தகுதியிழந்த வாகனங்களை இயக்கினால் அபராதம் எல்லாம் கிடையாது.
அந்த வாகனம் உடனடியாக ஸ்கிராப்பிங் சென்டருக்கு கொண்டு செல்லப்பட்டு ஸ்கிராப் செய்யப்பட்டு அதற்கான பணம் மற்றும் சான்று வாகனத்தின் உரிமையாளருக்கு வழங்கப்படும். வாகனம் போலீசாரிடம் சிக்கிய இடத்திலிருந்து ஸ்கிராப்பிங் சென்டருக்கு கொண்டு செல்லும் செலவை வாகனத்தின் உரிமையாளரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.