மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக நாட்டில் அமல்படுத்தப்பட்ட திட்டம் ஃபேம் (FAME). இந்த திட்டத்தின் இரண்டாவது வெர்ஷன் தற்போது செயல்பாட்டில் உள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் இதன் கீழே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 10 ஆயிரம் கோடி இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிதி முழுக்க மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.800 கோடியை மத்திய அரசாங்கம் ஃபேம் 2 (FAME 2) திட்டத்தின்கீழ் வழங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பெட்ரோல் பங்க்குகளில் சார்ஜிங் மையங்களை அமைத்திடவே இந்த பெரும் நிதி வழங்கப்படுவதாக அரசு தெரிவித்து உள்ளது. தற்போது நாட்டில் மின் வாகனங்களைச் சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் மையங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.
இதனால் எலெக்ட்ரிக் வாகனங்கள் வரிசையில் நின்று சார்ஜ் செய்யும் சூழல் உள்ளது. குறிப்பிட்ட சில சார்ஜ் மையங்களில் வாகனங்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க வேண்டி, முழுமையாக சார்ஜாகும் முன்னரே வாகனங்கள் வெளியேற்றப்படுவதாக புகார்களும் எழுகின்றன. இந்த மாதிரியான சூழலில் மின்சார வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 800 கோடியை ஆயில் நிறுவனங்களுக்கு மத்திய அரசாங்கம் வழங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிதியின் கீழ் 7,432 மின்வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. கனரக தொழில்துறை அமைச்சகத்தின் கீழே இந்த பெரும் நிதி ஆயில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி நாட்டில் ஒட்டுமொத்தமாக 6,586 சார்ஜிங் மையங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
இவற்றுடன் விரைவில் புதிதாக 7,432 சார்ஜிங் மையங்கள் இணைக்கப்பட உள்ளன. ஆகையால், கணிசமான அளவு மின்வாகன சார்ஜிங் மையங்களின் தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிதி மூலம் அதி வேக சார்ஜிங் மையங்களே அமைக்கப்பட உள்ளன. பெட்ரோல் பங்க்குகளிலேயே இதற்கான இடம் ஒதுக்கப்பட்டு, அங்கேயே சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்போதைய சூழலில் மின்சார வாகனங்களை வாங்கப் பலரும் ஆர்வமாக இருந்தாலும், சார்ஜி செய்வதற்கான வசதிகள் இல்லாததால் அதைத் தள்ளிப் போட்டு வருகிறார்கள். இந்த நிலையை விரைவில் புதிய சார்ஜிங் மையங்களின் வருகை களைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, நான்கு சக்கர மின்சார வாகன பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை இப்போது இருப்பதைவிடப் பலமடங்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
Also Read : 2023 ஆல்-நியூ வெர்னா..! டெலிவரி செய்ய துவங்கிய ஹூண்டாய் நிறுவனம்.!
சிசிஎஸ்-II ரக ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட உள்ளன. இந்த மையங்களை அமைக்க மட்டுமே அரசு மானியம் வழங்கும். CHAdeMO ரக சார்ஜிங் மையம் அமைக்க எந்தவொரு மானியமும் வழங்கபடாது எனத் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் உள்ளிட்ட ஆயில் நிறுவனங்களுக்கே சார்ஜிங் மையங்கள் அமைக்க நிதி வழங்கப்பட உள்ளது.
இதுதவிர, தனியார் நிறுவனங்கள் சார்ஜிங் மையங்களைக் கட்டமைப்பதற்கு மானியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. 2024 ஆண்டிற்குள் நாடு முழுவதும் 22 ஆயிரம் சார்ஜிங் மையங்களை அமைப்பதை இலக்காகக் கொண்டு அரசாங்கம் செயல்பட வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.