இந்தியாவில் நான்கு வழிச் சாலை திட்டம் தொடங்கப்பட்டு இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட நான்கு வழிச்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலைகளில் கிட்டத்தட்ட 60 கிலோமீட்டருக்கு ஒரு முறை நாம் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்காக நாடு முழுவதும் டோல் பிளசாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள 1,181 சுங்க வசூல் மையங்கள் மூலம் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த வசூல் 1.40 லட்சம் கோடியாக உயரும் வாய்ப்பிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. டோல் பிளாசாக்கள் இல்லாமல் வேறு வழியில் சாலை பயன்பாட்டுக் கட்டணத்தை வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
முன்னதாக சுங்கச் சாவடிகளில் கூட்ட நெரிசலைக் குறைக்க ஃபாஸ்ட் டேக் முறையை மத்திய அரசு கொண்டு வந்து அதைக் கட்டாயப்படுத்தியது. இதனால் வாகன ஓட்டிகள் கட்டாயம் பாஸ்ட் டேக்கை பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். என்னதான் ஃபாஸ்ட்டேக் வந்தாலும் அது எதற்காகக் கொண்டு வரப்பட்டதோ அந்த பிரச்னை மட்டும் இன்னும் தீரவில்லை. தற்போதும் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையாக அணி வகுத்து நிற்கும் நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எதிர்பார்த்த அளவிற்குப் பலனை ஃபாஸ்டேக் தரவில்லை. இந்நிலையில் மத்திய அரசு இந்த சுங்கச்சாவடி வசூல் முறையில் மாற்றம் கொண்டு வரத் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
தற்போது இருந்துவரும் ஃபாஸ்ட் டேக் முறையிலான சுங்கச்சாவடி கட்டண வசூலை மாற்றி நம்பர் பிளேட் ரீடிங் கருவிகள் அல்லது ஜிபிஎஸ் முறையிலான வசூல் முறையைக் கொண்டு வரலாம் என ஆலோசனை நடத்தியது. இதில் ஜிபிஎஸ் முறையிலான வசூல் முறையைக் கொண்டு வர முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல் மற்றும் தொழில்நுட்ப சாத்தியங்களை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசினார். அப்பொழுது அவர் அடுத்த 6 மாதத்தில் இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகள் எல்லாம் அகற்றப்படும் என்றும், சுங்கச்சாவடி வசூல் முறைக்குப் பதிலாக ஜிபிஎஸ் கருவிகளைக் கொண்டு வாகனங்களை டிராக் செய்து அதன் மூலம் வசூல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது எனப் பேசினார். இதன் மூலம் இந்தியாவில் சுங்கச்சாவடிகள் எல்லாம் விரைவில் மூடப்படும் என எதிர்பார்க்கலாம்.
Also Read : உஷார்.. கார் விபத்துக்கு காரணமாகும் எலி.. காரை பாதுகாக்க சில டிப்ஸ்!
சுங்கச் சாவடியில் வாகனங்களின் காத்திருப்பு நேரம் 8 நிமிடமாக இருந்தது. ஃபாஸ்ட்டேக் வந்ததும் இது வெகுவாக குறைந்துள்ளது. 2020-21, 2021-22 ஆகிய காலகட்டங்களில் வாகனங்களின் காத்திருப்பு காலம் 47 நொடிகளாக மாறிவிட்டது. இவ்வளவு பெரிய மாற்றம் வந்தாலும் முக்கியமான பிரச்சனை அதிகமாக வாகனங்களைக் கையாளும் சுங்கச்சாவடிகளில் தான் இருக்கிறது. குறைவான வாகனங்களைக் கையாளும் சுங்கச்சாவடிகளில் அதிக கூட்ட நெரிசல் இல்லை.
அங்கு வெறும் 10 நொடிகளில் கூட கடந்து விட முடிகிறது. ஆனால் அதிக வாகனங்களைக் கையாளும் சுங்கச்சாவடிகளில் 2-3 நிமிடம் வரை காத்திருக்கும் நிலை இன்றும் இருக்கிறது. இதன் காரணமாகவே சுங்கச்சாவடிகளையே அகற்றிவிட்டு ஜிபிஎஸ் முறையிலான டோல் கலெக்ஷன் சிஸ்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: GPS, Toll gate, Toll Plaza