ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சியில் அந்த நாட்டின் போக்குவரத்து வசதி மற்றும் கட்டமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் நம் நாட்டில் போக்குவரத்து கட்டமைப்பு மற்றும் வசதிகள் மிகவும் மேம்பட்டதாகவே இருக்கிறது. நாட்டின் பெரும்பாலான நகரங்களை இணைக்கும் நான்கு வழிச்சாலைகள், நாடு முழுவதும் இணைக்கப்பட்ட ரயில் போக்குவரத்து என மிகவும் வலுவான போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை நம் நாடு கொண்டுள்ளது. ரயில் சேவையைப் பொருத்தவரை கிட்டத்தட்ட தன்னிறைவு அடைந்து விட்டோம் என்றே சொல்லலாம். அடுத்த கட்டமாக மெட்ரோ ரயில், வந்தே பாரத் சேவை என மேம்படுத்தப்பட்ட கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
அடுத்த முயற்சியாக இந்தியாவில் புல்லட் ரயில் சேவையை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மும்பை - அகமதாபாத் நகரங்களுக்கிடையே புல்லட் ரயில் சேவைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரயில் போக்குவரத்து வளர்ச்சியின் உச்ச கட்டமாக இந்தியாவில் மின்னல் வேக ஹைப்பர்லூப் சேவையை அறிமுகம் செய்யும் முயற்சி மற்றும் ஆராய்ச்சியில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. ஹைப்பர்லூப் போக்குவரத்து என்பது, பூமிக்கடியில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி அதில் மின்காந்த அலைகளின் உதவியுடன் கேப்சூல் போன்ற பெட்டிகளை மின்னல் வேகத்தில் பயணிக்கச் செய்வதாகும்.
வெளிநாடுகளில் கூட இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. எலன் மஸ்கின் ‘தி போரிங்’ நிறுவனம் மட்டுமே தனியாக ஒரு சுரங்கம் அமைத்து இதற்கான சோதனையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் சென்னை-பெங்களூரு மற்றும் சென்னை-புனே நகரங்களுக்கிடையே ஹைப்பர்லூப் போக்குவரத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளன.
சென்னை ஐஐடி ஏரோநாட்டிக்கல் மாணவர்களின் ஆராய்ச்சியுடன் இந்த திட்டத்தை இந்திய ரயில்வே விரைவில் செய்து முடிக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. திட்டமிட்டபடி பணிகள் சரியாக நடைபெற்றால் இன்னும் ஏழு அல்லது எட்டு ஆண்டுகளில் ஹைப்பர்லூப் சேவை இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது.
ஹைப்பர்லூப் சேவை மட்டும் இந்தியாவிற்கு வந்துவிட்டால், மக்களின் பயண நேரம் இன்னும் வெகுவாக குறையும் என்று கூறப்படுகிறது. ஹைப்பர்லூப் ரயில்களைச் செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு முன்பாக, இந்தியா புல்லட் ரயில் திட்டங்களை இந்த வழிப் பாதைகளில் இயக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய ரயில்வேயின் திட்டப்படி, ஹைப்பர்லூப் சேவை களமிறங்கினால் சென்னை-பெங்களூரு வெறும் 25 நிமிடத்தில் பயணிக்கலாம். அதேபோல், சென்னை-புனே இடையிலான பயண நேரம் வெறும் 35 நிமிடங்களாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இருந்து மதுரைக்கு வெறும் 30 நிமிடத்திற்குள் பயணிக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bullet Train, Indian Railways, Railway