சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெடை இன்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த பட்ஜெட் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில், பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கையில் முன்மொழியப்பட்ட பல திட்டங்கள் சேர்க்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேநேரத்தில் கரும்பு மற்றும் நெல்லுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்படாததும், நெல் கொள்முதல் அளவை அதிகரிப்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படாததும் உழவர்களுக்கு பெரும் ஏமாற்றமளிக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் வலியுறுத்தல் காரணமாகவே தமிழக அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறது. வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதில் மகிழ்ச்சி தான் என்றாலும் கூட, தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான நோக்கத்தை அடைவதற்கு இன்னும் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது. வேளாண் வளர்ச்சி குறித்து உழவர்களுக்கு கருத்துரைகளை வழங்க வட்டத்திற்கு ஒரு வேளாண் அறிவியலாளர் நியமிக்கப்படுவார்.
சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்படும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் சிறுதானிய உணவகங்கள் தொடங்கப்படும், உலகின் சிறந்த வேளாண் நடைமுறைகளை அறிந்து கொள்வதற்காக தமிழ்நாட்டு உழவர்கள் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை மூன்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல் நிதிநிலை அறிக்கையில் முன்மொழியப்பட்டவை. அவற்றை அரசு செயல்படுத்துவதில் பாமகவுக்கு மகிழ்ச்சி என குறிப்பிட்டார்.
கடந்த 2021-22ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத வகையில் 119.97 லட்சம் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. நடப்பாண்டில் காவிரி பாசன மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 5.36 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்பதெல்லாம் மகிழ்ச்சியளிக்கின்றன. நடப்பு ஆண்டில் 127 லட்சம் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கும் எட்டக் கூடியது தான்.
ஆனால், 2021&22ஆம் ஆண்டில் உழவர்கள் சாகுபடி செய்த 119.97 லட்சம் டன் உணவு தானியங்களில் 43 லட்சம் டன் நெல் மட்டுமே அரசால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள மூன்றில் இரு பங்கு உணவு தானியங்கள் மிகக்குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்கப்பட்டுள்ளன. இந்த நிலையை மாற்ற நெல் கொள்முதலை அதிகரிக்க வேண்டும். ஆனால், அதற்கான திட்டங்கள் எதுவும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது உழவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
வேளாண்மை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வசதியாக பண்ணைச் சுற்றுலா திட்டம் செயல் படுத்தப்படும், தோட்டக்கலை சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்கான திட்டம், குளிர்கால காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிப்பது, உழவர் சந்தை மேம்பாடு உள்ளிட்ட நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான திட்டங்களும் உழவர்களுக்கு பயனளிக்கும் என்பதில் எந்த ஐயத்திற்கும் இடமில்லை.
நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை குவிண்டாலுக்கு சன்ன வகைக்கு ரூ.100, பொது வகைக்கு ரூ.75, கரும்புக்கு டன்னுக்கு ரூ.195 என்ற அளவிலேயே தொடர்கிறது. 2023&24ஆம் ஆண்டில் அவை உயர்த்தப்படவில்லை. அதனால், கரும்பு டன்னுக்கு ரூ. 3016 மட்டுமே விலை கிடைக்கும். நெல்லுக்கான கொள்முதல் விலையும் மத்திய அரசு உயர்த்தும் அளவுக்கே கிடைக்கும்.
கரும்புக்கு டன்னுக்கு ரூ.5000, நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சிக்காக நிலம் கையகப்படுத்தப்படாது என்ற அறிவிப்பு இல்லாததும் பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் திருச்சி - நாகை இடையே வேளாண் தொழில் பெருவழித்தடம் அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.1000 கோடியில் செயல்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டுள்ளது.
ஆனால், அந்தத் திட்டத்திற்கு நடப்பாண்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இத்திட்டத்திற்கான அறிவிப்பு தான் வெளியாகிறதே தவிர நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. உழவர்கள் நலன்கருதி சுட்டிக்காட்டப்படும் இக்குறைகளை சரி செய்வதற்கான அறிவிப்புகளை பதிலுரையில் தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:PMK, TN Budget 2023