வேளாண் நிதிநிலை தாக்கல் செய்த போது மாப்பிள்ளை சம்பா அரிசி குறித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நகைச்சுவையோடு பேசியது, சட்டமன்ற உறுப்பினர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
ஏரினும் நன்றால் எருவிடுதல் என்ற திருக்குறளுடன் சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட் தாக்கலை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். 3 ஆவது முறையாக வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய, அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பச்சை துண்டு அணிந்து வந்தார். அவருக்கு உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முனைப்பாடியாரின் இன்சொல் விளைநிலமா என்ற அறநெறிச்சாரத்தை கூறி அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தனது உரையை தொடங்கினார். தனது உரையில் மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளை மாதிரி இருக்கலாம் என்றும் தங்க சம்பா சாப்பிட்டால் தங்கம் மாதிரி ஜொலிக்கலாம் என்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நகைச்சுவையோடு தெரிவித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் மெல்ல திரும்பி அமைச்சரை பார்த்து, லேசாக புன்னகைத்தார். உடனே குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு அப்போ எல்லோருக்கும் கொடுங்கள். சாப்பிட தயாராக இருக்கிறோம்” என்றார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
முன்னதாக, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கையை வைத்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, மலர் கொத்துக்கு பதிலாக சிறுதானிய பயிர்களின் கொத்தை பரிசாக அளித்தார்.
வேளாண்துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்தமைக்காக நன்றி தெரிவிக்கும் வகையில் முதலமைச்சருக்கு எம்எல்ஏ டிஆர்பி ராஜா மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் பொருட்களையும் பரிசாக வழங்கினார்.
வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலினும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வமும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:TN Budget 2023