மேகமலை வனப்பகுதிகளில் யளவு குறைந்து நீர் வரத்து சீரானதால் 3 நாட்களுக்கு பின் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது சுருளி அருவி. நீர்ப்பிடிப்பு பகுதிகளான இரவங்கலாறு வென்னியாறு உள்ளிட்ட மேகமலை வனப்பகுதிகளில் பெய்த கோடை மழையால் கடந்த செவ்வாய்க்கிழமை சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். தொடர்ந்து நீர்வரத்து சீராகாமல் இருந்ததால் சுற்றுலா பயணிகளுக்கான தடை நேற்று வரை 3 நாட்களாக நீடித்தது.
இந்நிலையில் தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையளவு குறைந்து அருவியின் நீர்வரத்து சீரானதால் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகளுக்கான தடையை கம்பம் கிழக்கு வனத்துறையினர் விலக்கிக் கொண்டனர்.
இதையடுத்து அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர். உயரமான மலையில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டுகிற சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர்.