தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த இளஞ்செழியன். காய்கறி மற்றும் பழங்களில் பல்வேறு உருவங்களை செதுக்குவதில் வல்லவர். இவர், தற்போது சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் இன்று துவங்கிய சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து காய்கனி உருவங்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டார்.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முட்டைக்கோஸ் மற்றும் தர்பூசணி பழங்களிலான சதுரங்க பலகை மற்றும் சதுரங்க பொம்மைகள் ஆகியவற்றை செதுக்கி பள்ளி மாணவ - மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தினார்.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க நிகழ்ச்சிக்காக சென்னை வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆகிய இருவரது உருவத்தையும் தர்ப்பூசணி பழங்களால் செதுக்கி சதுரங்கம் விளையாடுவது போல் வடிவமைத்து உள்ளார்.
மேலும் தம்பி சின்னம், சதுரங்க ஆட்டத்தில் பயன்படுத்தப்படும் பொம்மைகள் மற்றும் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்ற வாசகங்கள் ஆகியவற்றை செதுக்கியுள்ளார்.
இன்று முதல் வருகின்ற 10 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த செஸ் திருவிழாவினை வரவேற்கும் விதமாக இந்த காய்கனி சிற்பங்களை அவர் வடிவமைத்துள்ளதார்
காய்கனி சிற்பக்கலைஞரான இவர் கடந்த 17 ஆண்டுகளாக காய்கறியில் சிற்பங்கள் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.