ஞாபக மறதி என்பது தினமும் அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று. குறிப்பாக 60 வயதிற்கு மேல் சிலருக்கு தன்னுடைய மகள், மகன், மனைவி என யாரையும் அடையாளம் தெரியாமல் இருப்பதோடு, தன்னுடைய அடிப்படை தேவைகளையே எப்படி நிறைவேற்றிக்கொள்வது என்பதை மறந்துவிடுகிறார்கள். இந்த பாதிப்பைத் தான் மருத்துவர்கள் டிமென்சியா எனப்படும் மறதி நோய் என்கிறார்கள். மூளையில் படியக்கூடிய சில நச்சுப்புரதங்களால் இந்த ஞாபக மறதி நோய் வருவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் முதியவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு நாள்பட்ட நீரழிவு பிரச்சனையும்,உயர் ரத்தஅழுத்த நோய் மற்றும் விபத்துகளால் ஏற்படும் தலைக் காயம், போதைப் பொருள் பயன்பாட்டாலும் ஞாபக மறதி நோய் வருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நோய் பாதித்தவர்கள் படிப்படியாக நினைவாற்றல் இழப்பு, மூளை செயல்திறன் குறைவு, வார்த்தைகளை மறந்து விடுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. மேலும் வீட்டில் உள்ளவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களையே மறக்கும் நிலைக்கூட ஏற்படுகிறது.
மறதி நோய் பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணிப்பதற்கு அன்பு மற்றும் பொறுமையும் மிகவும் அவசியம். இந்நோய் பாதித்தவர்கள் அனைத்து விஷயங்களையும் மறந்துவிடுவதால் இவர்களை கையாள்வது சவாலான விஷயம் தான். செய்தித்தாள் படி, கணினி பயன்படுத்துதல், மொபைலில் நண்பர்களுடன் பேசுவது போன்ற வழக்கமான செயல்களை எப்படி செய்ய வேண்டும் என பொறுமையாக கற்றுக்கொடுக்க வேண்டும். இது இவர்களின் மனநிலையை கொஞ்சம் மாற்றுவதற்கு உதவியாக இருக்கும்.
ஊட்டச்சத்து மேலாண்மையை கவனத்தில் கொள்ள வேண்டும். வயதானவர்களின் ஊட்டச்சத்து தொடர்பான பிரச்சனைகள் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும். திடமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. படுத்த படுக்கையாக இருக்கிறீர்கள் என்பதால் தண்ணீர் குறைந்த அளவு கொடுக்ககூடாது. இதனால் சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படக்கூடும். எனவே இதுப்போன்ற பிரச்சனையைத் தவிர்க்க உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்கவும்.
மறதி நோய் பாதித்தவர்களைப் பராமரிப்பதில் முக்கியத்துவம் வாய்ந்த சுகாதார மேலாண்மை. வயதானவர்களுக்கு அவர்களை அறியாமலே சில நேரங்களில் உடம்பில் காயங்கள், கீறல்கள் மற்றும் வெட்டுக்கள் ஏற்படக்கூடும். எனவே அடிக்கடி அவர்களின் சுகாதாரத்தில் கவனமுடன் இருப்பது அவசியமான ஒன்று. மேலும் உடலில் இரத்த ஓட்டத்தைத் தவிர்க்க சில பயிற்சிகளை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். குறிப்பாக முதுகில் புண்கள் ஏற்படுவதைத் தடுக்க பல மணி நேரங்கள் படுக்கையிலேயே இருக்க விடாமல், மெதுவாக அவர்களை நாற்காலியில் அமர வைக்க வேண்டும்.
இதோடு வீட்டிலேயேதினசரி நடைப்பயிற்சி, வீடு, தோட்டம் போன்றவற்றை பராமரிப்பது, சுத்தமாக வைத்துக்கொள்ள முயல்வது, நண்பர்களுடன் அரட்டையடிப்பது, ஜாலியாக அமர்ந்து உணவருந்துவது போன்றவற்றை அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நாம் கற்றுக்கொடுக்க வேண்டும். இதேப்போன்ற வழிமுறைகளை நீங்கள் மேற்கொள்வதோடு, குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.