மழலை பேச்சுகள் மட்டும் குழந்தைகளுக்கு சொந்தமில்லை.. அடம்பிடித்து அழுவதும் அவர்களின் குணாதிசயங்களில் ஒன்று. அம்மா, இது வேண்டாம் என்று சொல்லும் பொருளை அடம் பிடித்து, அழுது புழும்பி வாங்குவதும், கிடைக்கவில்லையென்றால் வீட்டில் உள்ள பொருள்களையெல்லாம் கீழே தூக்கி எறிவதையும் சில குழந்தைகள் மேற்கொள்வார்கள். இவற்றையெல்லாம் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு கோபத்தில் சில அம்மாக்கள் அடி தான் கொடுப்பார்கள்.
இவ்வாறு நீங்கள் குழந்தைகளைக் கோபத்தில் அடிக்கும் போது அவர்களின் மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக வன்முறைக்கு மாறுகிறது. எதற்கெடுத்தாலும் கோபம், அடம்பிடிப்பது, ஆக்ரோசமாக கத்துவது போன்ற குணாதிசயங்கள் நிச்சயம் ஏற்படும். எனவே அடம்பிடிக்கும் குழந்தைகள் உங்கள் வீட்டில் இருந்தால் முதலில் நீங்கள் நிதானமாக செயல்பட வேண்டும்.
குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது. எனவே அவர்கள் வழியில் சென்று தான் அவர்களின் மனநிலையை மாற்ற வேண்டும். இதோ குழந்தைகளைச் சமாளிக்க உதவும் சில பயனுள்ள வழிமுறைகள் குறித்து பெற்றொர்களாகிய அனைவரும் தெரிந்துக்கொள்வது அவசியம்.
குழந்தைகளைத் திட்டாதீர்கள் : இன்றைக்கு உள்ள பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள கணவன் – மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதுப்போன்ற சூழலில் வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர்களுடன் செலவழிக்கும் நேரம் என்பது குறைவு. வேலை முடித்து வீட்டிற்கு வரும் போது குழந்தைகள் ஏதாவது ஒன்றிற்காக அடம்பிடித்து அழும் போது, கடுமையான கோபம் ஏற்படும். ஏன் என்னை இப்படி தொல்லை செய்கிறாய்? என திட்டுவதோடு சில நேரங்களில் அடித்தும் விடுவார்கள். இதனால் குழந்தைகளின் கோபம் ஆக்ரோசமாகிறது. எனவே இதுப்போன்ற சூழலில் உங்களது குழந்தைகளைத் திட்டுவதை விட்டு விட்டு அவர்களின் அமைதியாக பேசுங்கள், என்ன பிரச்சனை என விவாதியுங்கள். நிச்சயம் நல்ல குழந்தையாக வளர்வார்கள்.
குழந்தைகளைப் பாராட்டுதல் : குழந்தைகளின் கோபம் மற்றும் ஆக்ரோசமான மனநிலைக்கு மாறுவதற்கு பெற்றோர்கள் தான் முதல் காரணம். அவர்கள், தவறு செய்வதற்கும் ஒவ்வொரு பெற்றோர்களும் தான் வாய்ப்பளிக்கிறார்கள். அதாவது உங்களது குழந்தைகளின் மனநிலை என்ன? எதில் திறமையுடன் உள்ளார்கள்? என்பதை முதலில் அறிந்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களுடன் ஒருபோதும் ஒப்பிட்டு பேசக்கூடாது. நீங்கள் தான் சிறப்பு, உங்களிடம் மற்றவர்களை விட பிற திறமைகள் உள்ளது என அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். குழந்தைகளின் ஒவ்வொரு படியிலும், அவர்களுடன் துணை நின்று அவர்களின் திறமையைப் பாராட்டுங்கள். நிச்சயம் குழந்தைகளை நல்வழிப்படுத்த முடியும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. தவறுகள் எதுவும் குழந்தைகளிடம் இருந்தால் மாற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
பெற்றோர்களின் மனநலம் முக்கியம் : வேலைக்குச் செல்லும் பெண்கள் முதல் வீட்டில் வேலை பார்க்கும் பெண்கள் அனைவருக்கும் பல பிரச்சனைகள் எழக்கூடும். வீட்டு வேலைகளைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்காமல் திணறக்கூடும். இந்த சூழலில் உங்களது குழந்தைகளும் அடம்பிடிக்கும் போது சொல்ல முடியாத அளவிற்கு மனநிலை மாறும். கோபம் உச்சத்திற்கு வரும். இந்த கோபத்தை குழந்தைகளிடம் காட்டினால் நிச்சயம் அவர்களின் நிலை மேலும் மோசமடையும். எனவே உங்களைத் தொந்தரவு செய்தாலும் மனநிலையை ஒழுங்குப்படுத்திக் கொள்ளுங்கள். அதே சமயம் என்ன செய்தாலும் அதை ரசிப்பதோடு, எது தவறு? எது சரி என கற்றுக்கொடுக்க மறந்துவிடாதீர்கள். இதோடு உங்களது வேலைக்கான நேரத்தை முறையாக திட்டமிட்டுக்கொள்ளுங்கள். சரியான நேரத்தில் உங்களது வேலைகளை முடித்துவிட்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவழிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இதோடு குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடுதல் : நண்பர்களாக பழகுதல், திறமைகளை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு பணிகளை நீங்கள் மெற்கொண்டாலே நிச்சயம் குழந்தைகள் நல்ல மனநிலையுடன் வளர்வார்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.