உடல் பருமன் என்பது உலகளாவிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. எதை செய்தால், என்ன சாப்பிட்டால், என்ன சாப்பிடாவிட்டால், எடை குறையும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. எடை குறைக்க வேண்டும் என்று முயற்சியில் பலருமே சிரமப்படுகிறார்கள். வாழ்க்கை முறையில் சில ஆரோக்கியமான மாற்றங்களை செய்தாலே எடை குறைந்துவிடும். ஆனால், மிகவும் பரபரப்பான வாழ்க்கை முறையால் இன்ஸ்டன்ட் உணவுகள், உடனே சமைத்து சாப்பிட கூடிய உணவுகள் அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்தால் சில நிமிடங்களிலேயே சுடச்சுட வீட்டுக்கு டெலிவரி செய்யும் உணவுகளைத்தான் பெரும்பாலும் விரும்புகிறோம். அதுமட்டுமில்லாமல், நாள் முழுவதும் தூங்கும் நேரம் தவிர்த்து, மொபைல், கணினி என்று உடலுக்கு உழைப்பும் குறைந்து விட்டது. இதனாலேயே உடல் எடை கூடி உடல் பருமன் லட்சக்கணக்கானோரை தொடர்ந்து பாதித்து வருகிறது.
உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கும் ஒரு ஆண்டு நாளொன்றுக்கு 2500 கலோரிகள் வரை உணவுகளை சாப்பிட வேண்டும்; அதே மாதிரி ஒரு பெண் 2000 கலோரிகள் வரை சாப்பிட வேண்டும். இதற்கு கூடுதலாக உணவுகளை சாப்பிடும் போது, அதற்கேற்ற உடல் உழைப்பு இல்லை என்றால், உடல் எடை கூடி, பருமன் ஏற்படுகிறது. உடல் பருமன் தான் பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளுக்கு முதற் காரணியாக இருக்கிறது என்பதை மறக்க கூடாது.
நான் ஆரோக்கியமான உணவுகளை மட்டும் தான் சாப்பிடுகிறேன், சுறுசுறுப்பாக செயல்படுகிறேன் என்று கூறினாலும் ஒரு சிலருக்கு எடை குறைவதில்லை. உண்மையிலேயே எடை குறைய வேண்டுமென்றால் இந்த பின்வரும் பழக்க வழக்கங்களை கட்டாயம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
செயற்கை இனிப்பூட்டிகளுக்கு நோ.! பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட துவங்கியது தான் உடல் பருமன் மற்றும் எடை கூடுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் உடல் எடை குறைக்க முடியாமல் சிரமமாக இருப்பதற்கும் இது ஒரு காரணம். மேலும், நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமனுக்கு இதுதான் முக்கியமான காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இவைகளில் சத்துக்களே கிடையாது ஆனால் கலோரிகள் மட்டும் அதிகம். எனவே நீங்கள் செயற்கையான இனிப்பு சுவையூட்டிகள், அதாவது ஆர்டிபிஷியல் ஸ்வீட்டனர்ஸ் சாப்பிடுவதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். உங்களுக்கு இனிப்பு சுவை தேவை என்றால், தேனை பயன்படுத்தலாம்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் : நார்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், எடை குறைப்பதற்கு முக்கியமான கருவியாக இருக்கிறது என்பதை பலரும் அறியவில்லை. உலக சுகாதார மையம், ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து கைப்பிடி அளவாவது பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
பழங்கள் மற்றும் காய்கறிகளில் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் இது நீரிழிவு மற்றும் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் பாதிப்பு ஏற்படாமலும் பாதுகாக்கும். மேலும், பழங்கள் மற்றும் காய்கறிகளில் குறைவான கலோரிகள் உள்ளன. எனவே நார்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சாச்சுரேட்டட் கொழுப்பு உணவுகளை முழுவதுமாக தவிர்க்க வேண்டும் : எண்ணெய்யில் பொறித்த, வறுத்த உணவுகள், ஒரே எண்ணெய்யை பல முறை பயன்படுத்தக்கூடிய உணவுகள் ஆகியவற்றில் சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமாக இருக்கின்றது. அதேபோல இறைச்சியில் சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமாக இருக்கின்றது. இந்த கொழுப்பு இருக்கும் உணவுகளை அதிகம் சாப்பிடுவது உடல் எடை அதிகரிக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் கொலஸ்டிரால் அளவும் அதிகரிக்கும். எனவே இதை தவிர்த்து ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட கொட்டை வகைகள், விதைகள், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், வெண்ணெய் பழம் ஆகியவற்றை சாப்பிடவேண்டும்.
பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளை தொடக் கூடாது : சுவையூட்டிகள், நிறமூட்டிகள், உணவு நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க பயன்படுத்தப்படும் பொருட்கள், மற்றும் மைதாவில் செய்யப்பட்ட உணவுகளை தொடவே கூடாது. பேக்கரி உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடி-டி-ஈட் உணவுகள், டெட்ரா பேக் ஜூஸ்கள், குளிர்பானங்கள் ஆகியவை அடங்கும்.
இனிப்பு உணவுகளை குறைக்க வேண்டும் : ஏற்கனவே கூறியது போல, இனிப்பு அதிகம் உள்ள உணவுகளை குறைக்க வேண்டும். சோடா, எனர்ஜி பானங்கள், கேக், டின் / கேனில் வரும் பழச்சாறுகள், மிட்டாய், ஐஸ் கிரீம் ஆகியவற்றை தவிர்த்து விடுங்கள்.