பி வாசு இயக்கத்தில் சத்யராஜ் கவுண்டமணி குஷ்பூ மனோரமா நடித்த நடிகன் திரைப்படம் 1990 நவம்பர் 30ஆம் தேதி வெளியானது. சத்யராஜின் திரை வரலாற்றில் அவருக்கு பெயர் வாங்கித் தந்த படங்களில் நடிகனும் ஒன்று. அதேபோல் சத்யராஜ் கவுண்டமணி காம்பினேஷனில் ரசிகர்களை மகிழ்வித்த திரைப்படங்களில் நடிகன் முக்கியமானது.
நடிகன் படத்தை 1962 இல் வெளியான ஷம்மி கபூரின் புரபசர் திரைப்படத்தை தழுவி பி வாசு எடுத்திருந்தார். அவரது பல படங்களைப் போல நடிகனும் ஒரு தகவல் திரைப்படம்.
நடிகனுக்கு முன்பே இதே சாயலில் அமைந்த திரைப்படம் ஒன்று தமிழில் வெளியாகியிருந்தது. அதில் நடித்தவர் ரவிச்சந்திரன். காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் அறிமுகமான ரவிச்சந்திரன் 1968இல் நடித்த திரைப்படம் நாலும் தெரிந்தவன். இந்தப் படத்தின் கதை திரைக்கதை வசனத்தை விசி குகநாதன் எழுத ஜம்புலிங்கம் படத்தை இயக்கினார். ரவிச்சந்திரன் திமுக அனுதாபி. 1967இல் அண்ணா தலைமையிலான திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அந்த நேரத்தில் வெளிவந்த ரவிச்சந்திரன் பணக்காரப் பிள்ளை படத்தில் 'அன்னைத் தமிழின் அருந்தவப் பிள்ளை அண்ணா போல பிறந்தவர் இல்லை' என பாடி நடித்தார். இதே போல் அண்ணா புகழ் பேசும் பல பாடல் வரிகளுக்கு ரவிச்சந்திரன் வாயசைத்திருக்கிறார். பணக்காரப் பிள்ளை படப் பாடலின் இடையிடையே அண்ணா பதவியேற்ற காட்சிகளை காட்டி திமுகவினரை குஷிப்படுத்தியிருந்தனர். இதனை தொடர்ந்து ரவிச்சந்திரன் நடிப்பில் வெளியான திரைப்படம் நாலும் தெரிந்தவன். இந்தப் படத்தின் கதை புரபசர் இந்திப் திரைப்படத்தின் கதையை ஒத்திருக்கும். இதிலும் திமுக பிரச்சார வரிகள் இடம் பெற்றிருந்தன. ஒரு பாடலின் நடுவே, 'நாலும் தெரிந்தவன் அரங்கத்தில் வந்தால் நாடே திரண்டு வரும்' என்ற வரிகள் வரும். அது அண்ணாவை குறிப்பிட்டு எழுதப்பட்டது.
அதேபோல் ஒரு கதாபாத்திரம் ரவிச்சந்திரனிடம், அரசியலில் ஆர்வம் உண்டா என்று கேட்கும்போது, இல்லை ஆனால் அறிஞரின் எழுத்துக்களை விரும்பிப் படிப்பேன் என்று பதில் அளிப்பார். இப்படி அண்ணாவையும் திமுகவையும் உயர்த்திப் பிடிக்கும் பாடல்களும் வசனங்களும் கொண்ட திரைப்படங்களில் ரவிச்சந்திரன் நடித்து வந்தார். அதில் ஒன்றுதான் நாம் மேலே பார்த்த நாலும் தெரிந்தவன். இந்தப் படத்தின் கதை காட்சியையும் நடிகன் திரைப்படத்தில் பி வாசு எழுத்தாண்டிருப்பார்.
நடிகன் அடிப்படையில் ஒரு ஆள் மாறாட்ட கதை. பணத்தேவையில் இருக்கும் சத்யராஜ் வேலைக்காக ஊட்டி வரும்போது ரயிலில் ப்ரொபசர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் பெட்டி மாறிவிடும். சத்யராஜ் தான் போக வேண்டிய இடத்திற்கு பதில் வெண்ணிற ஆடை மூர்த்தி போக வேண்டிய இடத்திற்கு வயதான கெட்டப்பில் செல்வார்.
அங்கு இருப்பவர் மனோரமா. பேபி அம்மா என்ற பெயரில் அவர் நடித்த அந்த கதாபாத்திரம் மிக முக்கியமானது. அவருடைய பேத்தியாக குஷ்பூ வருவார்.
வயதான கெட்டப்பில் இருக்கும் சத்யராஜை மனோரமா காதலிக்க, இளமையான தோற்றத்தில் இருக்கும் சத்யராஜை குஷ்பு காதலிப்பார். இரண்டு சத்யராஜும் ஒருவர் என்பது மனோரமா, குஷ்பு இருவருக்கும் தெரியாது.
போலீஸ் துரத்தி ஓடிவரும் கவுண்டமணி சத்யராஜின் அறைக்குள் ஒளிந்து கொள்ள, அவருக்கு இந்த ஆள் மாறாட்ட விஷயம் தெரிய வரும் அதை வைத்து கவுண்டமணி சத்யராஜை பிளாக்மெயில் செய்து காரியம் சாதித்துக் கொள்ளும் காட்சிகள் வயிறு குலுங்க ரசிகர்களை சிரிக்க வைத்தது.
இளையராஜாவின் இசையில் பாடல்களும் வெற்றி பெற படம் 100 நாட்களை கடந்து ஓடி பி வாசு சத்யராஜ் இருவரின் வெற்றிப்பட எண்ணிக்கையில் மேலும் ஒன்றை அதிகப்படுத்தியது.
1990 நவம்பர் 30 வெளியான நடிகன் திரைப்படம் நேற்றுடன் 32 வருடங்களை நிறைவு செய்து இன்று 33 வது வருடத்தில் நுழைகிறது.