தனுஷ் நடிப்பில் வாத்தி என்ற படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கிய இந்தப் படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியாகியிருந்தது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி எதிர்மறை வேடத்தில் நடித்திருந்தார்.
இதனையடுத்து தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் என்ற பான் இந்தியா படத்தில் நடித்துவருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமான பீரியட் படமாக உருவாகிவருகிறது.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டியிருந்தார். இந்த வீடு நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு அருகில் அமைந்துள்ளது.
இந்த வீட்டின் பூமி பூஜையின் போது நடிகர் ரஜினி கலந்துகொண்டிருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக வீடு கட்டி முடிப்பதற்குள் தனுஷ் - ஐஸ்வர்யா கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.
இதனையடுத்து சமீபத்தில் இந்த வீட்டின் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷின் பெற்றோர், சகோதரிகள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
கிரகப் பிரவேசத்தின்போது தனுஷுடன் எடுத்துக்கொண்ட படங்களை இயக்குநர் சுப்பிரமணிய சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர அவை வைரலாகின.
மூன்று மாடிகள் கொண்ட இந்த வீட்டின் மொத்த செலவு ரூ.150 கோடி என்று கூறப்படுகிறது.
இந்த வீடு வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டது எனவும் நவீன பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த வீடு 8 படுக்கை அறைகள் கொண்டது எனவும் வீட்டின் உள்ளே சிறிய திரையரங்கம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. மேலும் தனுஷ் தன்னை சந்திக்க வரும் இயக்குநர்களுக்கென தனி அறை ஒதுக்கி இருக்கிறாராம்.