கோவையில் இருந்து சுமார் 123 கி.மீ தொலைவிலும், வால்பாறையில் இருந்து 14 கி.மீ தொலைவிலும், பொள்ளாச்சியில் இருந்து ஏறத்தாழ 79 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய சின்னக் கல்லாறு அருவி.
கோவை மாவட்டம் ஆழியாறு பகுதியில், வளைந்து நெளிந்து செல்லும் அழகிய மலைப்பாதையும் கொண்டை ஊசி வளைவுகளும் என கண் கொள்ளக் காட்சிகளை ரசித்துக்கொண்டே செல்வது பேரானந்தத்தை தரும்.
இயற்கை வரைந்த அழகே உருவான ஓவியம்போல காட்சியளிக்கும் வால்பாறை பகுயில், இதமான குளிரும், மலைகளை முத்தமிடும் மேகங்களும், ஆர்ப்பரித்து சில்லென கொட்டும் அருவிகளும், பசுமை போர்த்திய காடுகளும் உங்களை அழகில் மயக்கும்.
வால்பாறையில் இருந்து சின்னக்கல்லார் செல்லும் சாலையின் நான்கு புறமும் தேயிலைத் தோட்டங்கள் பசுமையாய் காட்சியளித்து மனதை குதூகலப்படுத்தும். ஆங்காங்கே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுறுசுறுப்பாக வேலைசெய்வதை பார்க்கமுடியும்.
தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே கூழாங்கல் ஆறு சலசலத்து ஓடும். இங்கே மழைக் காலத்தில் காட்டாற்று வெள்ளம் பெரும் சத்தத்தோடு பாயும். சீரான தண்ணீர் ஓடும்போது இதைப் பார்த்தாலே, ஆற்றில் கால்களைநனைத்து, குளிர்ந்த நீரில் விளையாட வேண்டும் என்ற ஆசை தோன்றும். அங்கே கண்ணாடி போல தெளிந்து இருக்கும் தண்ணீருக்குள் கூழாங்கற்கள் நிறைந்து காணப்படும்.
கூழாங்கல் நிறைந்திருக்கும் இநத் ஆற்றையும், அங்கிருக்கும் பசுமையையும், இதமான் சூழலையும் எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்காது. அங்கிருந்து கிளம்பவும் மனம்வாராது அவ்வளவு அழகாக இருக்கும்.
சிறுகுன்றா மற்றும் ஈட்டியார் எஸ்டேட் தாண்டி சென்றால் அங்பே வனத்துறை சோதனைச் சாவடி இருக்கும். அங்கே, யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் எச்சரித்து, சில அறிவுறைகளை கூறி அனுப்பை வைப்பார்கள்.
அங்கிருந்து கீழ் நீராறு அணை, சிங்கோனா, மேல் நீராறு அணை ஆகியவற்றை கடந்து சின்னக் கல்லார் செல்லும்போது, சாலை பயணத்தின் அற்புத அனுபவத்தை பெறமுடியும்.
பின்னர், கோணலாற்றின் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது சின்னக்கல்லாரை போக்கி நடந்து செல்ல வேண்டும். வழியில் ஆங்காங்கே அட்டைப் பூச்சிகள் உங்களை பதம்பார்த்து இரத்தத்தை உறஞ்சக்கூடும் கவனமாக செல்லுங்கள்.
அங்கே சில்லென்று வீசும் சாரலோடு கொட்டும் சின்ன கல்லாறு அருவியை பார்க்கலாம். அங்கே குடும்பத்தோடு குளித்து மகிழலாம். இந்த அனுபவம் உங்கள் மனதில் என்றும் தங்கி நினைக்கும்போதெல்லாம் இன்பத்தை அள்ளிக்கொடுக்கும்.