
- News18
- Last Updated: April 22, 2021, 18:42 IST
டேட்டிங் செயலி மூலம் ஒருவர் பிளாஸ்மா தானம் செய்பவரை கண்டுபிடித்ததை, டிவிட்டரில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
நாடு முழுவதும் கொரொனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பலர் கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டு வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள அதேவேளையில் பிளாஸ்மா தானம் செய்வோருக்கான தேவையும் அதிகரித்துள்ளது. அரசு, தனியார் என பல வழிகளில் பிளாஸ்மா தானம் செய்வோரை கொரோனா நோயாளிகள் தேடி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா சிகிச்சை பெற்று வரும் தனது நண்பருக்காக டேட்டிங் செயலி மூலம் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்த ஒருவரை நெட்டிசன் கண்டுபிடித்துள்ளார்.
சோஹினி சட்டோபதயாய் (Sohini Chattopadhyay) என்ற டிவிட்டர் யூசர் தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், டின்டர் (Tinder) டேட்டிங் செயலி மூலம் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தவரை கண்டுபிடித்ததாகவும், அரசு 0, டேட்டிங் செயலி 1 என பதிவிட்டுள்ளார். சோஹினி சட்டோபதயாயின் 30 வயதான நண்பர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், அவருக்காக பிளாஸ்மா தானம் செய்ய முன்வருபவர்களை பல வழிகளில் தேடியுள்ளனர். அவர்கள் எடுத்த முயற்சிக்கு எந்தவிதத்திலும் பலன் கிடைக்கவில்லை. கடைசியாக டின்டர் என்ற டேட்டிங் செயலியிலும் முயற்சியை தொடர்ந்துள்ளனர்.
Also read... குடும்பமே மறுத்த நிலையில் கொரோனாவால் இறந்த இந்து நபருக்கு இறுதிச்சடங்கு செய்த முஸ்லீம் சகோதரர்கள்...!
அவர்களின் இந்த முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. டின்டர் டேட்டிங் பயோவில் பிளாஸ்மா தேவை குறித்து குறிப்பிட்டிருந்ததாகவும், அதனை வைத்து அண்மையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற ஒருவர் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்ததாகவும் அடுத்தடுத்த டிவிட்டுகளில் விளக்கம் கொடுத்துள்ளார். பிளாஸ்மா தானம் செய்ய ஒருவர் முன்வந்தபோது தன்னுடைய நண்பர் கொரோனாவில் இருந்து மீண்டுவந்து கொண்டிருந்ததாக தெரிவித்துள்ள சோஹினி, அதனால் தங்களுக்கு பிளாஸ்மா தானம் தேவைப்படவில்லை என்றும் கூறியுள்ளார். டின்டர் செயலி வழியாக தங்களுக்கு பிளாஸ்மா தானம் கிடைத்தது வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்ததாகவும் சோஹினி சட்டோத்பயாய் கூறியுள்ளார்.
அவரின் இந்தப் பதிவுக்கு பதில் அளித்துள்ள நெட்டிசன்களில் ஒருவர், டின்டர் செயலியில் இருக்கும் பலர் பிளாஸ்மா தானம் செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இருப்பினும் பலரது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களான டெல்லி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கடந்த வாரங்களில் பிளாஸ்மாவுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. இது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர் சந்திப்பிலும் தெரிவித்திருந்தார். அதாவது, அண்மையில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று திரும்பியவர்கள் பிளாஸ்மா தானம் கொடுக்க முன்வரும்போது, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மற்ற நோயாளியை விரைவாக குணப்படுத்த உதவியாக இருக்கும். நீண்ட நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்கள் கொடுக்கும் பிளாஸ்மா பலனளிக்காது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.