யூடியூப் தனது விதிமுறைகளை மாற்றியுள்ளது. அதன்படி இனி செய்திகளை பதிவேற்றும் யூடியூப் சேனல்கள் தங்கள் விவரங்களை மத்திய அரசிடம் தெரியப்படுத்த வேண்டும்.
இந்தியாவைப் பொருத்தவரையில் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளம் என்றால் யூடியூப்-க்கு தான் முதலிடம். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பயன்பாடு அதிகரித்த போதிலும் கூட முதலிடத்தை தொடர்ந்து யூடியூப் தக்கவைத்து வருகிறது. யூடியூப் தனது சேவை விதிமுறைகளை அவ்வப்போது மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில் வரும் 2022 ஜனவரி 5ஆம் தேதி தனது சேவை விதிமுறைகளில் மாற்றம் செய்யவிருப்பதாக யூடியூப் தெரிவித்துள்ளது.
இனி புதிய விதிமுறைகளின்படி செய்தி அல்லது நிகழ்கால நிகழ்வுகள் குறித்து வீடீயோ வெளியிடும் யூடியூப் கணக்குகள் தங்களின் கணக்குகள் குறித்த சுய விவரங்களை மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் அவர்களுடைய கணக்குகளுக்கான அணுகல் இழப்பை எதிர்கொள்ளலாம் அல்லது அவர்களுடைய கணக்குகள் அனைத்தும் அல்லது பகுதியாக முடித்துவைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சேவை விதிமுறை மாற்றம் தொடர்பாக தனது வாடிக்கையாளர்களுக்கு யூடியூப் நிறுவனம் தகவலை அளித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வரும் ஜனவரி 5, 2022 அன்று நாங்கள் சேவை விதிமுறைகளில் புதிய மாற்றத்தை கொண்டுவர உள்ளோம். இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ன் இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகள் குறியீடு பிரிவு 5-ன்படி, கூகுள் நிறுவனமும் கூட, செய்தி அல்லது நிகழ்நேர நிகழ்வுகள் குறித்த தகவல்களை வெளியிடும் கணக்குகள் தங்களின் கணக்கு விவரங்களை மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்பம் அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டும்.
நீங்கள் இந்தப் புதுப்பிப்புகள் குறித்து படித்திருப்பதை உறுதிசெய்து, youtube-ஐ பயன்படுத்துவதற்கு விதிமுறைகள் மற்றும் Google-ன் தனியுரிமைக் கொள்கை பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த ஒப்பந்தங்களை மீறினால் எச்சரிக்கை விடுக்கப்படலாம், மேற்கொண்டு கணக்குகளுக்கான அணுகல் இழப்பை எதிர்கொள்ளலாம் அல்லது அவர்களுடைய கணக்குகள் அனைத்தும் அல்லது பகுதியாக முடித்துவைக்கப்படலாம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.