Home / News / tamil-nadu /

இந்திய மொழிகளின் அறிவை தமிழக மாணவர்களுக்கு மறுப்பது சரியில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்திய மொழிகளின் அறிவை தமிழக மாணவர்களுக்கு மறுப்பது சரியில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்ரவி

ஆளுநர் ஆர்.என்ரவி

நீட் தேர்வுக்கு முன்னதான காலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்திருக்கிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் காரணமாக இத்தகைய எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

பிற மாநில மாணவர்களைப் போல் நமது மாணவர்களும் பிற இந்திய மொழிகளைப் பயிலவேண்டும் என்றும் இந்திய மொழிகளின் அறிவை நமது மாணவர்களுக்கு மறுப்பது சரியில்லை என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவையும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125-வது பிறந்தநாள் விழாவையும் தேசிய பெருமிதத்தோடு கொண்டாடி வருகிறோம். இந்த நன்னாளில் தேச விடுதலை வீரர்களை, அவர்களின் தியாகங்களுக்காகவும் இன்னல்களுக்காகவும் நினைவு கூர்கிறோம்.

வீரமங்கை வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பிரம் பிள்ளை, மகாகவி சுப்பிரமணிய பாரதியார், முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட பலரையும் எண்ணிப் பார்த்து நம்முடைய நன்றி அறிதலை உரித்தாக்குகிறோம்.

வாராது போல வந்த மாமணியாம் சுதந்திரத்தைப் போற்றி, அந்த மகத்தான தியாகிகளின் கனவு பாரதத்தை, பொருட்செல்வம் செறிந்த, ராணுவ பலம் மிக்க, ஞானத்தில் உயர்ந்த, உலக சகோதரத்துவ நோக்கோடு ஆன்மிகத்தில் திளைத்த பாரதத்தை உருவாக்க வேண்டும்.

377

கோவிட் நோய்க்குத் தீர்வாகவும் அதன் பக்கவிளைவுகளுக்குத் தடுப்பாகவும் புதிய மருந்துகளையும் கண்டுள்ளோம். 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி மைத்ரி திட்டத்தின் கீழ் தடுப்பூசி ஆதரவை நாம் அளித்துள்ளோம்.

கோவிட் - 19 நோயின் மூன்றாவது அலையில் இப்போது நம் நாடு இருக்கிறது. தடுப்பூசியைப் பொறுத்தவரை, உலக சாதனையை ஏற்படுத்திவிட்டோம்.

தமிழ்நாடு முன்னோக்குப் பாதையில் பயணிக்கிறது. கோவிட் மேலாண்மையில் நாம் சிறப்பாக செயல்பட்டுள்ளோம்.  பல்வேறு துறைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில், பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் எடுத்துக்காட்டாகவும் தமிழ்நாடு உள்ளது.

அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதே இப்போதைய உடனடித் தேவை.  நீட் தேர்வுக்கு முன்னதான காலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்திருக்கிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் காரணமாக இத்தகைய எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

எனினும் அரசு பள்ளிகளின் கல்வித்தரவை மேம்படுத்த வேண்டியது தற்போதைய அவசரத் தேவை. உயர்கல்வியிலும், ஒருகாலத்தில் நம்முடைய பல்கலைக்கழகங்களுக்கு இருந்த பெயரையும் பெருமையையும் மீண்டும் பெறுவதற்கு நாம் உழைக்கவேண்டும்.

உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழேயாகும். இலக்கிய, பண்பாட்டு, ஆன்மிகச் செறிவுமிக்க மொழி. பல்வேறு பாரதீய மொழிகளுக்குத் தமிழ் மொழி பெருமை கூட்டியுள்ளது. நாட்டின் பிற பகுதிகளுக்குத் தமிழ்மொழி பரவுவதை ஊக்கப்படுத்த வேண்டும்.

தமிழ் மொழியின் பெருமையை நாட்டின் பிற பகுதிகளில் அறியச் செய்கிற அதே நேரத்தில், பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களைப் போல் நம்முடைய பள்ளி மாணவர்களும் பிற இந்திய மொழிகளைப் பயிலவேண்டும். பிற இந்திய மொழிகளின் அறிவை, நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது என்பது அவ்வளவு சரியில்லை. சகோதரத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றை வளர்ப்பதோடு மொழி ரீதியான அறிவு மற்றும் பண்பாட்டு இடைச் சேர்க்கை நம் அனைவரையுமே வளப்படுத்தும்.

பாரதத்தின் பண்பாட்டு மையமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. நாட்டிலேயே அதிகப்படியான எண்ணிக்கையில் கோயில்களைக் கொண்டுள்ள மாநிலம் நம்முடையதே ஆகும். சில கோயில்கள் 2000 ஆண்டு பழமையானவை; இவை இன்றும் பயன்பாட்டில் இருக்கிற, உயிர்ப்புமிக்க கோயில்களாகும்.

ஏதோ சில சடங்குகள் நடைபெறுகிற கல்லும் மண்ணும் சுதையுமான வெற்றுக் கட்டுமானங்கள் இல்லை, நம்முடைய திருக்கோயில்கள். நம்முடைய உயிர்ப்புமிக்க, உணர்வுமிக்க, ஆன்மிக அடையாளத்தின் வாழ்விடங்கள் இவை. தக்க கவனம், நம்பிக்கை, பக்தி போன்றவற்றோடு, அமைப்புரீதியான, உணர்வுரீதியான, ஆன்மிகரீதியான முழுமையில் இவை பாதுகாத்துப் பேணப்பட வேண்டும். அரசியல்  சட்டத்தில் கோயில் கொண்டுள்ள அடிப்படை கடமைகளுக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம். நாட்டின் நன்மைகளைக் கருத்தில் கொண்டு நம்முடைய கடமைகளை ஆற்றுவதற்கான உறுதி ஏற்போம் என தெரிவித்துள்ளார்

Tags:Republic day, Tamil Nadu Governor