Home / News / tamil-nadu /

நான் இந்த பொருளில்தான் பேசினேன்.. எந்த சமுதாயத்தையும் புண்படுத்தும் நோக்கமல்ல... ஐ.லியோனி விளக்கம்

நான் இந்த பொருளில்தான் பேசினேன்.. எந்த சமுதாயத்தையும் புண்படுத்தும் நோக்கமல்ல... ஐ.லியோனி விளக்கம்

 ஐ.லியோனி

ஐ.லியோனி

Dindigul Leoni | நமது கைகளை வைத்தே, நமது கண்களை குருடாக்கும் பாஜகவின் மலிவான அரசியலை நம் மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று லியோனி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கும்மிடி பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் தலைமையில் இரண்டு நாட்கள் முன்பு நடைபெற்றது. இதில் தலைமைக்கழக கொள்கை பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக தலைவருமான திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு பேசுகையில், செருப்பைத் தலையில் தூக்கிக் கொண்டு நடந்துச்சென்ற சமுதாயத்தை இன்று வணக்கத்திற்குரிய மேயர் அவர்களே என அழைக்க வைத்து திராவிட மாடல், திராவிட புரட்சியை செய்த தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று தெரிவித்தார்.

மேலும் பெண்கள் அரட்டை அடித்துக் கொண்டு வெட்டியாக இருப்பார்கள் என்ற நிலையை மாற்றி பெண்களுக்கு ஓட்டுரிமை வாங்கித் தந்தது நீதிக் கட்சி என்றும் பெண்களுக்கு சொத்துரிமை வாங்கித்தந்தது கலைஞர் என்றும் பெண்களுக்கு அரசியலில் 50% இட ஒதுக்கீடு வழங்கியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்றும், பெண் விடுதலைக்கு பாடிய பாரதியார் பாரதிதாசன் வழியில் ஆட்சி நடத்தி வருபவர் ஸ்டாலின் என்றும் செங்கோட்டை அருகே டெல்லியில் அறிவாலயத்தை நிறுவிய தலைவர் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் கை காட்டுபவரே பிரதமர் ஆவார் என்பதற்கு அதுவே ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது என்றும் பேசியிருந்தார்.

இதில், செருப்பைத் தலையில் தூக்கிக் கொண்டு நடந்துச்சென்ற சமுதாயத்தை இன்று வணக்கத்திற்குரிய மேயர் அவர்களே என அழைக்க வைத்து திராவிட மாடல், திராவிட புரட்சியை செய்த தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று லியோனி பேசிய வீடியோ வைரலாக பரவியது.

அதில், முழுமையான அவர் பேச்சு இடம்பெறாததால் சர்ச்சையானது.

இந்நிலையில், அந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், முன்பு செருப்பை கையிலும் தலையிலும் சுமக்க வைத்து கொடுமைப் படுத்திய ஆதிக்க சமுதாயத்திடமிருந்து விடுதலை பெற வைத்து இன்று பெரும் பொறுப்புகளை பெற வைத்த திராவிட இயக்கமும், தலைவர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில்தான் என்ற பொருளில் சொல்லப்பட்டது ஒழிய எந்த சமுதாயத்தையும் புண்படுத்தும் நோக்கமல்ல.

ஒரு வார்த்தையை எடுத்து, நமது கைகளை வைத்தே, நமது கண்களை குருடாக்கும் பாஜகவின் மலிவான அரசியலை நம் மக்கள் புரிந்து கொள்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

377

Tags:DMK, MK Stalin