கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியான சுவாதி, நீதிமன்றத்தில் ஆஜரானார். விசாரணையில் சிசிடிவி காட்சிகள் காட்டி கேட்கப்பட்ட கேள்விக்கு அதில் கோகுல்ராஜுடன் செல்வதுதான் இல்லை என தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததாக கூறி, கடந்த 2015-ம் ஆண்டு ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இதுதொடர்பான விசாரணையின் போது, நீதித்துறையின் மனசாட்சியை திருப்திப்படுத்தும் வகையில் சுவாதியை மீண்டும் சாட்சியாக விசாரிக்க விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இது கட்டாயத் தேவை எனவும், தவறும்பட்சத்தில் நீதித்துறையின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும் என தோன்றுவதாகவும் குறிப்பிட்டனர்.
எனவே, கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி, நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டனர். அதன்படி சுவாதி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு சாட்சியிடம் கேள்வி எழுப்பினர்.
அவரிடம் கோயிலில் இருந்த CCTV காட்சிகளை காண்பித்து கேள்வி எழுப்பினர்.
நீதிபதி: இது யார் என தெரிகிறதா?
சுவாதி: முகம் சரியாக தெரியவில்லை.
நீதிபதி: கோகுல் ராஜ் கொலை வழக்கில், நடந்த உண்மையை நீங்கள் கூறினால் நல்லது. இல்லை என்றால், நான் கேள்வி கேட்டு கொண்டே இருப்பேன்.
நீதிபதி: சத்தியபிரமாணம் எடுத்துக்கொண்டு ஏன் பொய் சொல்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து நீதிபதிகள் ஒரு ஆடியோவை கேட்க சொல்லி விசாரித்தனர். (அந்த ஆடியோவில், கோகுல்ராஜும் தானும் கோவிலில் இருந்த போது, யுவராஜ் வந்து நீங்கள் காதலிக்கிறீர்களா என கேட்டதாக, பிரதான சாட்சியான சுவாதி கோகுல்ராஜின் உறவினரிடம் பேசியுள்ளார்.)
நீதிபதி: ஆடியோவில் பேசியது நீங்கள் தானா? குரல் பரிசோதனை செய்யவுள்ளோம்.
சுவாதி: இந்த குரல் என்னுடையது இல்லை.
நீதிபதி: கார்த்திக் ராஜா வை உங்களுக்கு தெரியுமா? கோகுல்ராஜ் காணாமல் போனது குறித்து கார்த்திக் ராஜா உங்களிடம் பேசினாரா?
சுவாதி: ஞாபகம் இல்லை
நீதிபதி: 2015, ஜூன் 23ம் தேதி நடந்தது வரை உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?
சுவாதி: எங்களுக்கு ஆதரவாக யாரும் இல்லாததால், இந்த வழக்கை விசாரித்த CBCID போலீசார் கூறியதை நான் செய்தேன். எங்களுக்கு எதுவும் தெரியாது.
என சுவாதி கண்ணீர் மல்க சாட்சியளித்தார். இதனையடுத்து சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்ததால் நீதிமன்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மீண்டும் மதியம் 2:15 மணிக்கு விசாரணை தொடங்கியது.
அப்போது சுவாதியை கடுமையாக கண்டித்த நீதிபதிகள், உண்மையை சொல்ல மீண்டும் ஒரு வாய்ப்பளிப்பதாக தெரிவித்து விசாரணையை புதன்கிழமையன்று ஒத்திவைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Gokul raj murder, Madurai High Court