தமிழகம் முழுவதிலுமுள்ள சிவாலயங்களில் இன்று ஆருத்ரா எனப்படும் திருவாதிரைத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் உள்ள மரகத நடராஜருக்கு இன்று சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் நடைபெறுகின்றன.
சிவனின் பல்வேறு வடிவங்களில் ஆடல்வல்லான் எனப்படும் நடராஜர் வடிவம் தமிழகத்தில் கடந்த 1,500 ஆண்டுகளுக்கு மேலாக போற்றப்பட்டு வருகிறது.
இந்துமத சாஸ்திரங்களில் சிவனின் அடையாளமாக திருவாதிரை நட்சத்திரம் கருதப்படுகிறது. மார்கழி மாதம் பவுர்ணமியோடு கூடி வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று, ஆடல்வல்லானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும்.
திருவாதிரையான இன்று அதிகாலை 2 மணி முதல் சிவாலயங்களில் ஆடல்வல்லானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஊர்த்துவ தாண்டவருக்கு, விபூதி, நெல்லிப்பொடி, மாதுளம் பழம், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றன.
மயிலாப்பூர், உத்தரகோசமங்கை, நெல்லை, செப்பறை, குற்றாலம், மதுரை என முக்கிய சிவாலயங்களில் இன்று காலையில் அபிஷேக ஆராதனைகளுக்குப் பின் ஆடல்வல்லானின் வீதியுலா நடைபெற உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று பிற்பகலில், ஆயிரம்கால் மண்டபத்தில் இருந்து ஆடல்வல்லான் தனது சபைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் திரண்டுள்ளனர்.
திருவாதிரை என்றாலே நினைவுக்கு வருவது களி தான். வீடுகளிலும் கோயில்களிலும் இன்று திருவாதிரைக் களி தயாரிக்கப்பட்டு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்படும். அதனாலேயே திருவாதிரைக்கு ஒருவாய் களி என்ற பழமொழி உருவானது.
மேலும் 10 நாட்கள், பன்னிரு திருமுறைகளும் காப்பிடப்பட்டு, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை ஓதப்பட்டு வந்தது. திருவாதிரையான இன்று திருமுறைகளுக்கு காப்பு நீக்கப்பட்டு இன்று முதல் அவை இறைவன் திருமுன்பு ஓதப்படும்.
Also see... ஜப்பானின் சாதனையை முறியடித்த திருவண்ணாமலை பள்ளி மாணவர்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Tamilnadu