ஹர்பஜன் சிங் காலில் தொட்டு வணங்கிய சுரேஷ் ரெய்னா: காரணம் என்ன?

பல ஆண்டுகளாக ஒன்றாக கிரிக்கெட் விளையாடிய போதிலும் களத்தில் எந்த வித ஈகோவுமின்றி சுரேஷ் ரெய்னா ஹர்பஜன் சிங் காலில் விழுந்ததை ரசிகர்கள் சிலாகித்து பாராட்டி வருகின்றனர்.

ஹர்பஜன் சிங் காலில் தொட்டு வணங்கிய சுரேஷ் ரெய்னா: காரணம் என்ன?

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 15வது ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிந்தனர். இந்தப் போட்டியில் மட்டும் 400 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டது. இதில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 220 ரன்களை குவித்தனர். டு பிளெஸி (95*), ருதுராஜ் கெய்க்வாட் (64) ஆகியோர் பெரிய ஸ்கோர் குவிக்க கொல்கத்தா தரப்பில் ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக், பாட் கம்மின்ஸ் ஆகியோர் அதிரடியால் கொல்கத்தா 200 ரன்களுக்கு மேல் குவித்து பதிலடி கொடுக்க பரபரப்பான கட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றியை பெற்றது.

ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன் பின்னர் ரஸ்ஸல் (22 பந்துகளில் 54 ரன்கள்), கம்மின்ஸ் )34 பந்துகளில் 66 ரன்கள்), தினேஷ் கார்த்திக் (24 பந்துகளில் 40 ரன்கள்) குவித்து கொல்கத்தா அணி இலக்கை நெருங்க உதவினர். இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸின் தீபக் சாஹர் 29 ரன்களுக்கு 4 விக்கெட் வீழ்த்தி கொல்கத்தா அணிக்கு நெருக்கடி கொடுத்ததால் சென்னை அணி தனது 3வது வெற்றியை இந்த சீசனில் பெற்றது.

இப்படியாக களத்தில் நேற்றைய மோதல் பரபரப்பாக அமைந்த போதிலும், அதே களத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ரசிகர்களின் மனங்களுக்கு இதமான வருடலாக ஒர் சம்பவம் நடைபெற்றுள்ளது.

ட்விட்டரில் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில், நேற்று போட்டி தொடங்குவதற்கு முன்னதாக கொல்கத்தா அணி வீரரும், தனது முன்னாள் சக வீரருமான ஹர்பஜன் சிங்கின் காலைத் தொட்டு சுரேஷ் ரெய்னா வணங்குவதை பார்க்க முடிந்தது.

 

ஹர்பஜன் சிங் களத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்ததை பார்த்த சுரேஷ் ரெய்னா மரியாதை நிமித்தமாக ஹர்பஜன் சிங்கின் காலில் தொட்டு வணங்குவதற்காக கீழே குணிந்தார். இருப்பினும் சுரேஷ் ரெய்னாவின் செயலை பார்த்து திக்குமுக்காடிப் போன ஹர்பஜன் சிங் தனது காலை ரெய்னா தொட்டுவிடாதபடி உட்கார்ந்து பின் அவரை தூக்கி கட்டியணைக்கிறார்.

ட்விட்டரில் இந்த வீடியோவை பலரும் பார்த்து ரசித்து இருவருக்கிடையேயான அன்பால் ஈர்க்கப்பட்டு உணர்ச்சிவசத்தில் மூழ்கினர். பல ஆண்டுகளாக ஒன்றாக கிரிக்கெட் விளையாடிய போதிலும் களத்தில் எந்த வித ஈகோவுமின்றி சுரேஷ் ரெய்னா ஹர்பஜன் சிங் காலில் விழுந்ததை ரசிகர்கள் சிலாகித்து பாராட்டி வருகின்றனர்.

முன்னதாக ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த நிலையில் தற்போது அவர் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Arun
First published:April 22, 2021, 16:04 IST