• Home
  • »
  • News
  • »
  • spiritual
  • »
  • நவகிரகங்கள் ஒவ்வொருவருமே தனித்தனி மூலவராக அருள்பாலிக்கும் ஒரே கோவில் இதுதான்...

நவகிரகங்கள் ஒவ்வொருவருமே தனித்தனி மூலவராக அருள்பாலிக்கும் ஒரே கோவில் இதுதான்...

தென்னகத்தில் சூரியனுக்கான தனிக்கோவில் அமைந்துள்ளதும், ஒரே கோவிலுக்குள் நவகிரகங்களுக்கு என தனித்தனி கோவில்கள் அமைந்த ஒரே தலம் என்பதும் சிறப்பு.

நவகிரகங்கள் ஒவ்வொருவருமே தனித்தனி மூலவராக அருள்பாலிக்கும் ஒரே கோவில் இதுதான்...
சூரியனார் கோவில்

    தென் தமிழகத்தில் சூரியனுக்கான தனிக்கோவில் அமைந்துள்ளதும், ஒரே கோவிலுக்குள் நவகிரகங்களுக்கு என தனித்தனி கர்ப்பக்கிரகம் அமைந்த ஒரே தலம் என்பதும் சிறப்பு. சூரியன் சன்னதியில் நின்று தரிசிக்கும்போது குரு பகவானின் அருள் ஒருசேர கிடைக்கும் ஒரே தலமுமிதுதான். நவகிரகங்கள் ஒவ்வொருவருமே தனித்தனி மூலவராக இருந்து அருள் வழங்கும் தலமும் இதுதான்...

     நவ நாயகர்களையும் முதலில் இடமாக சுற்றி வந்து பின்னர் ஒன்பது முறை வலம் வரும் அமைப்புள்ள தலம். ஒரே கோவிலில் ஒன்பது கிரகங்களுக்கும் தோஷ பரிகாரங்கள் செய்யும்படி உள்ள தலம். இரண்டு அசுப கிரகங்களுக்கு இடையில் ஒரு சுப கிரகம் என்ற வரிசை முறையில் அமைந்து அருள்பாலிக்கும் தலம்.

    மேலும் படிக்க... ஒன்பது எனும் எண் ஆன்மீக மகத்துவங்கள் கொண்டது எப்படி?

    377

    சூரியனார் கோவிலின் அமைவிடம்

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கிழக்கே 15 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆடுதுறையில் இருந்து வடக்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலும், திருப்பனந்தாளில் இருந்து தெற்கே பத்து கிலோ மீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து மேற்கே 21 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

     தல வரலாறு

    முன்னொரு காலத்தில் காலவ முனிவர் என்பவர் இருந்தார். அவர் முக்காலத்தையும் அறியும் மூதறிவு உடையவராக திகழ்ந்தார். சில முனிவர்கள் இவரிடம் வந்து தங்கள் வருங்காலம் பற்றி கேட்டு அறிந்து கொள்வது வழக்கம். ஒருநாள் இளம் துறவி ஒருவர், காலவ முனிவரிடம் வந்து தனது வருங்காலம் குறித்து அறிவிக்கும்படி கேட்டார்.

    காலவ முனிவர் தமது ஞான திருஷ்டியால் இளம் துறவியின் வருங்காலம் பற்றி ஆராய்ந்து உமது வருங்காலம் பற்றி கூறுவதற்கு ஒன்றுமில்லை என்றார். உடனே அந்த துறவி, காலவ முனிவரிடம், மற்றவரின் வருங்காலம் பற்றி கூறும் நீர், உம்முடைய வருங்காலம் பற்றி அறிந்ததுண்டா? எனக்கேட்டு நகைத்தார்.

    உடனே காலவ முனிவர் அந்த துறவியைப் பார்த்து இவ்வளவு துணிச்சலாக இதுவரை என்னிடம் யாரும் கேட்டதே இல்லை. நீ யார்? என்று கேட்டார். அதற்கு அந்த துறவி நான்தான் காலதேவன் என்று சொல்லி விட்டு அங்கிருந்து மறைந்தார்.

    காலவ முனிவர் தன்னுடைய வருங்காலத்தை எண்ணிப் பார்த்தார். தன்னுடைய முன் வினைப்பயனால் கூடிய விரைவில் தமக்கு தொழுநோய் வரும் என்பதை உணர்ந்தார். மிகவும் மனம் நொந்து வாட்டம் அடைந்தார். காலவ முனிவரின் சோகம் படிந்த முகத்தை பார்த்த மற்ற முனிவர்கள் அவரிடம் சோகத்துக்கான காரணம் என்ன? என்று கேட்டனர். அதற்கு அவர், தமது வருங்கால நிலையை அவர்களிடம் எடுத்துரைத்தார்.

    மேலும் படிக்க...  நவக்கிரகங்கள் அருள் புரியும் தலங்கள்... முழு விபரம்...

    அதனைக் கேட்ட மற்ற முனிவர்கள் காலவ முனிவரே! முன்வினை பயனை யூட்டுகிறவர்கள் நவகிரகங்கள். அவர்களை நோக்கி தவம் செய்து வினைப்பயனில் இருந்து விடுதலை பெற முயற்சி செய்யுங்கள் என்று ஆறுதல் கூறினர். இதனையடுத்து ஒரு நல்ல நாள் பார்த்து பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவில் நின்று நவக்கிரகங்களை தியானித்து கடுந்தவம் புரிந்தார்.

    தம்மை நோக்கி தவம் புரியும் காலவ முனிவரின் முன்பு நவநாயகர்கள் ஒருசேர வந்து காட்சி கொடுத்தார்கள். காலவ முனிவரின் பரவச நிலையை கண்டு மகிழ்ந்த நவ நாயகர்கள், முனிவரே உங்களுக்கு என்ன வரம் வேண்டும்? என கேட்டனர்.

    சூரியனார்- இவருக்கு இடப்புறம் உஷா தேவியும், வலப்புறம் சாயா தேவியும் நின்ற வண்ணம் காட்சி அளிக்கின்றனர். 

    காலவ முனிவர், நவநாயகர்களை நோக்கி தன்னை தொழுநோய் அணுகாதபடி வரம் தரவேண்டும் என்று வேண்டினார். அதற்கு நவ நாயகர்களும் அவ்வண்ணமே ஆகுக என்று வரம் தந்து மறைந்தனர்.

    இந்த செய்தி பிரம்ம தேவருக்கு தெரிய வந்தது அதனால் பிரம்மதேவர் சினம் கொண்டு நவக்கிரகங்களை நோக்கி, நவக்கிரகங்களில் நீங்கள் தேவர்களாக இருந்தாலும் என் கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள் ஆவீர்கள். தனித்து இயங்கும் சுதந்திரம் உங்களுக்கு இல்லை.

    ஆனால் நீங்கள் எமது உத்தரவுக்கு கீழ்படியாமல் மீறி நடக்கத் தொடங்கினீர்கள். நீங்கள் சுதந்திரமானவர்களாகி காலவ முனிவருக்கு தொழுநோய் அணுகாமல் இருக்க வரம் கொடுத்துள்ளீர்கள். ஆகவே நீங்கள் 9 பேரும் பூலோகத்தில் பிறந்து காலவ முனிவர் தொழுநோயால் துன்பப்பட வேண்டிய கால அளவு வரை நீங்களும் அந்த தொழுநோய் துயர் அடைவீர்கள் என்று சாபமிட்டார்.

    மேலும் படிக்க... நவகிரகங்களுக்கு உரிய நவதானிய தானங்கள்!

    சாபம் பெற்ற நவக்கிரகங்கள் பிரம்மதேவரின் திருவடிகளில் விழுந்து வணங்கினர். தங்களை மன்னிக்க வேண்டும். காலவ முனிவரின் தவத்தினை அறிந்து அவர் கேட்ட வரத்தை தந்து விட்டோம். அறியாமல் செய்த பிழையை பொறுத்து தங்களின் சாபத்துக்கு விமோசனம் கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதைகேட்டு மனம் இரங்கிய பிரம்மதேவர், நவக்கிரக நாயகர்களாகிய நீங்கள் எனது கட்டளையை மீறி நடந்ததால் இந்த சாபம் பெற்றீர்கள். ஆயினும் சாபவிமோசனம் கேட்டு நிற்பதால் ஒரு வழி கூறுகிறோம்.

    நீங்கள் பூலோகத்திற்கு சென்று காவிரி ஆற்றின் வடகரையில் தங்கியிருந்து தவம் புரியுங்கள். 12 ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ந்து தவம் புரிய வேண்டும் என்று கூறினார். அதன்படி நவக்கிரகங்கள் 78 நாட்கள் தவம் புரிந்து 79-ம் நாள் திங்கட்கிழமை விடியலில் காவிரியில் நீராடி எழுந்தனர். அப்போது தங்கள் உடம்பில் இருந்த தொழுநோய் பாதிக்குமேல் குணமாகி இருப்பது கண்டு வியந்தனர்.

    மேலும் படிக்க...ருத்ராட்சம் உருவான கதை!

    பின்னர் பிராணநாதரை அணுகி வழிபட்டனர். வழிபாட்டின் முடிவில் பிராணநாதர், மங்களநாயகியுடன் நவநாயகர்களுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் பிராணநாதர், நவநாயகர்களை நோக்கி நீங்கள் தங்கி தவம் செய்த இடத்தில் உங்களுக்கு என தனி ஆலயம் உண்டாக்கி அது உங்களுக்கு உரிய தலமாக விளங்கும். அங்கே வந்து உங்களை வழிபடுவோருக்கு நீங்கள் சுதந்திரமாக அனுக்கிரகம் செய்ய வரம் தந்தோம் என்று கூறி மறைந்தருளியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

    கோவிலில் வழிபடும் முறை

    இந்த கோவிலில், கோல் வினை தீர்த்த விநாயகரை வணங்கிய பின்னர் முதலில் சூரிய பகவானையும், அடுத்து குரு பகவானையும் வழிபடவேண்டும். மூன்றாவதாக சனி பகவானையும் தொடர்ந்து புதன், சந்திரன், கேது, சுக்கிரன், ராகு என்ற வரிசை முறையில் வழிபாடுகள் ஆற்றி நிறைவாக தேஜஸ் சண்டேஸ்வரரை வணங்க வேண்டும்.

    கோள்வினைதீர்த்த விநாயகர்

    பிரம்மனால் சாபம் பெற்ற நவக்கிரக நாயகர்கள் இத்தலத்திற்கு வந்து தவம் செய்ய தொடங்கும்போது தங்களுக்கு ஏற்பட்ட சாபப்பிணி எனும் வினை நீங்கும் பொருட்டு விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். கோள்களின் வினையை விநாயகர் தீர்த்து வைத்தால் இவருக்கு கோள்வினைதீர்த்த விநாயகர் என்ற திருப்பெயர் உண்டாயிற்று. இவ் விநாயகர் கோவில், பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. ஏகதள விமானத்துடன் கூடிய கர்ப்பக்கிரகத்தில் விநாயகர் கிழக்கு முகமாக எழுந்தருளியுள்ளார்.

    மேலும் படிக்க... வெற்றிதரும் வெள்ளேருக்கு விநாயகர் வழிபாடு!

    கோவிலின் ஒன்பது அற்புதங்கள்

    1. தென்னாட்டில் சூரியனுக்கு என்று அமைந்துள்ள தனிக் கோவில் இது.

    2.  நவக்கிரகங்கள் ஒவ்வொருவருமே தனித் தனிக் கோவில்களில் மூலவராக இருந்து அருள்பாலிக்கும் ஸ்தலம்.

    3. சூரிய பகவானை அவர் சன்னிதியில் தரிசிக்கும் பொழுது குரு பகவானின் அருட்பார்வையும் ஒரு சேர கிடைக்கும் கோவில்.

    4. வாகனங்களும், ஆயுதங்களும் இல்லாமல் அமைதி தவழும் இன்முகங்களுடன், நவக்கிரகங்கள் அருள் வழங்கும் தலம்.

    5. ஒரு கோவிலுக்குள் நவக்கிரகங்களுக்கு என தனித்தனி சன்னிதிகள் அமைந்த ஒரே தலம்.

    6. நவ நாயகர்களையும் முதலில் இடமாக சுற்றி வந்து பின் ஒன்பது முறை வலம் வரும் அமைப்புள்ள தலம்.

    7. இரண்டு அசுபக்கிரகங்களுக்கு இடையில் ஒரே சுபக்கிரகம் என்ற வரிசை முறையில் அமைந்துள்ள தலம்.

    8. நவக்கிரகங்களும் ஒன்று சேர்ந்து விநாயகர் பிரதிஷ்டை செய்து அவர் அருளால் தங்கள் தோஷங்களை நிவர்த்தி செய்து கொண்ட தலம்.

    9. ஒரே கோவிலில் ஒன்பது கிரகங்களுக்கும் தோஷ பரிகாரம் செய்யும் படி அமைந்துள்ள தலம்.

    மேலும் படிக்க... திருநீறு அணிந்து கொள்ளும் முறைகள்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vaijayanthi S
    First published:August 15, 2021, 08:40 IST

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube