நாட்டில் சிறார்களுக்கான கோர்பிவாக்ஸ்(Corbevax) கோவிட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் பயாலஜிக்கல் இ நிறுவனம் தடுப்பூசிக்கான விலையை வெகுவாக குறைத்துள்ளது. இதுவரை ரூ.840ஆக இருந்த ஒரு தடுப்பூசி டோஸ் விலை தற்போது ரூ.250ஆக குறைக்கப்பட்டுள்ளது. வரி மற்றும் நிர்வாக கட்டணங்கள் ஆகியவற்றை சேர்ந்த பயனாளர்களுக்கு தடுப்பூசி டோஸ் விலை ரூ.400க்கு கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை 30 கோடி தடுப்பூசி டோஸ்களை உற்பத்தி செய்துள்ள கோர்பிவாக்ஸ் நிறுவனம் இதுவரை 10 கோடி டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.
நாட்டில் 18 வயதுக்குப்பட்டோருக்கான தடுப்பூசி திட்டமானது கடந்த ஜனவரி 3ஆம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், 12-15 வயதினருக்கான தடுப்பூசியை கோர்பிவாக்ஸ் நிறுவனம் மார்ச் 16ஆம் தேதி அறிமுகம் செய்தது. இதுவரை சுமார் 3 கோடி டோஸ்கள் சிறார்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 5 முதல் 12 வயதினருக்கு கோர்பிவாக்ஸ் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், தற்போது 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 191.37 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 100.80 கோடி பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும், 87.58 கோடி பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.2.97 கோடி பேர் முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்தியுள்ளனர். தடுப்பூசி திட்டத்தை பொறுத்தவரை ஆந்திர பிரதேசம், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் 15 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 100 சதவீத மக்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தியுள்ளனர்.
இதே வயது வரம்பில் குறைந்த பட்சமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் 82.9 சதவீத மக்கள் தான் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.தமிழ்நாட்டை பொறுத்தவரை 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 93.6 சதவீத மக்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Covid-19 vaccine, Vaccination