டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1988 ஆம் ஆண்டு முதல்முறையாக இந்த தினம் எய்ட்ஸ் தினமாக அறிவிக்கபப்ட்டது. எய்ட்ஸ் நோய் என்பது தீவிரமான உயிர்கொல்லி நோயாகும். இந்த நோய் எவ்வாறு பரவுகிறது, பாதுகாப்பாக இருப்பது எப்படி மற்றும் நோய் ஏற்படாமல் தடுப்பது எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வு உலகம் முழுக்க சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நாள் உலக எய்ட்ஸ் தினமாக அறிவிக்கப்பட்டது.
எச்ஐவி வைரசால் ஏற்படும் இந்த நோய் பற்றி இப்போது வரை பல விதமான கட்டுக்கதைகள் கூறப்பட்டு வருகின்றன. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
HIV என்று பரவலாகக் கூறப்படும் ஹ்யூமன் இம்யூனோ டிஃபிஷியன்ஸி வைரஸ் என்று கூறப்படும் வைரஸால் உருவாகும் நோய் தான் எய்ட்ஸ். எச்ஐவி வைரஸ் தோற்றால் எய்ட்ஸ் (AIDS – Acquired Immuno Deficiency Syndrome) நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி முழுவதுமாக உருக்குலைந்து விடும். சில ஆண்டுகளுக்கு முன் வரை எய்ட்ஸ் நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்தது.
எச்ஐவி வைரஸ் தொற்று இருப்பவர்கள் அனைவருக்குமே எய்ட்ஸ் நோய் ஏற்படாது. அதாவது கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல ஒரு நபர் உடலில் எச்ஐவி வைரஸ் தொற்று இருந்தாலுமே, அது தீவிரமாக நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதித்து, எய்ட்ஸ் ஆக மாறாது. HIV தொற்றின் தீவரமான நிலையே, AIDS என்று கூறப்படுகிறது. தொற்று ஏற்பட்டு, அதை உரிய நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சைகள் பெறவில்லை என்றால் ஒரு நபரின் உடலில் இருக்கும் எச்ஐவி கிருமி படிப்படியாக வளர்ந்து 2 – 5 ஆண்டுகளுக்குள் AIDS ஆக மாறிவிடும்.
சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படுவது தான் எய்ட்ஸ் நோயாளிகள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று.
பல ஆண்டுகளாக, உலக சுகாதார மையம், அரசாங்கம், தொண்டு நிறுவனங்கள் என்று பல அமைப்புகள் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இருப்பினும், எய்ட்ஸ் நோயாளிகள் மற்றும் எய்ட்ஸ் நோய் எவ்வாறு பரவுகிறது என்பதை பற்றி பல விதமான தவறான கருத்துக்களை மக்கள் இன்றுவரை நம்பி வருகிறார்கள். இதுவே எய்ட்ஸ் நோய் மேலும் பரவுவதற்கும், எய்ட்ஸ் நோயாளிகளை குற்றவாளிகளாக பார்ப்பதற்கும், ஒதுக்கி வைப்பதற்கும் முக்கிய காரணமாக இருக்கின்றன.
எய்ட்ஸ் மற்றும் எச்ஐவி தொற்று பற்றி இப்போது வரை நிலவி வரும் தவறான புரிதல் மற்றும் கட்டுக்கதைகள்...
எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் இரண்டுமே ஒன்று தான்
எச்ஐவி என்பது வைரஸ், எய்ட்ஸ் என்பது நோய். எச்ஐவி பாதித்தவர்களுக்கு எய்ட்ஸ் நோய் ஏற்படும் ஆபத்து மிக அதிகம். ஆனால், எச்ஐவி தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் அனைவருக்குமே எய்ட்ஸ் நோய் ஏற்படும் என்பது தவறான கருத்து. தொற்றின் தீவிரம் குறைக்க மருந்துகள், சிகிச்சை எடுத்துக்கொண்டால் எய்ட்ஸ் நோய் ஏற்படாமல் தடுக்க முடியும்.
எய்ட்ஸ் நோயாளிகளுடன் பழகினால், அவர்களுடன் சாப்பிட்டால், அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தினால் எய்ட்ஸ் பரவும்
எய்ட்ஸ் என்பது காற்றில் பரவும் தொற்று நோய் கிடையாது. எய்ட்ஸ் நோயாளிகளுடன் பழகுவது, அவர்களுடைய பொருட்களை பயன்படுத்துவது, அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, வெளியில் செல்வது இவற்றால் எய்ட்ஸ் பரவாது. வியர்வை, சளி, எச்சில் வழியாக எய்ட்ஸ் பரவாது.
Also Read : UTI Infection : வெஸ்டர்ன் டாய்லெட் சீட்டுகள் சிறுநீர் பாதை தொற்றை ஏற்படுத்துமா..? தவிர்க்கும் வழிகள்..!
எய்ட்ஸ் நோய் உருவாவதற்கு முக்கிய காரணமான எச்ஐவி வைரஸ் என்பது உடலில் இருக்கும் திரவங்கள் வழியாகத்தான் பரவும். எச்ஐவி தொற்று, பாலியல் உறவுகள் மேற்கொள்ளும் போது, வைரஸ் தொற்று பாதித்தவர்களின் ரத்தம் இன்னொரு நபருக்கு ஏற்றும் போது, கர்ப்பிணிக்கு எச்ஐவி பாதிப்பு இருந்தால் அது குழந்தைக்கு ஏற்படலாம் என்று இதன் வழியாகத்தான் எச்ஐவி தொற்று ஏற்படும். எனவே எச்ஐவி பாதித்த நபர்களுடன் அல்லது எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் பழகினாலே, நமக்கும் எய்ட்ஸ் வந்துவிடும் என்பது மிக மிக தவறான கருத்து. இந்த ஒரு காரணத்தால்தான் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவருமே ஒதுக்கப்படுகிறார்கள்.
கர்ப்பிணிக்கு எச்ஐவி பாதிப்பு இருந்தால் குழந்தையும் கட்டாயமாக நோயால் பாதிக்கப்படும்.
மேலே கூறியது போல உடலின் திரவங்கள் வழியாகத்தான் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு எச்ஐவி தொற்று ஏற்படுகிறது. இதில் கர்ப்பிணி பெண்களும் அடங்கும். கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்தால், கருவில் இருக்கும் குழந்தையும் எச்ஐவி பாதிப்புவோடு பிறக்கக் கூடியதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.
ஆனால் எச்ஐவி பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எல்லாமே, எச்ஐவி தொற்றுடன் பிறப்பது இல்லை. வைரஸ் தொற்று நெகட்டிவாக, தொற்று பாதிப்பு இல்லாமல் ஆரோக்கியமான குழந்தைகளாக பிறக்கிறார்கள். அதாவது அம்மாவுக்கு எச்ஐவி தொற்று இருந்தால் அது நிச்சயமாக குழந்தைக்கும் எச்ஐவி தொற்று இருக்கும் என்பது தவறான கருத்து.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு எச்ஐவி பாதிப்பு இருக்கிறதா என்பது பரிசோதனை மேற்கொள்ளப்படும். அவ்வாறு இருப்பது கண்டறியப்பட்டால், அதற்குரிய மருந்துகளும் கொடுக்கப்படும். எனவே அம்மாவிடம் இருந்து குழந்தைக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் கணிசமாக குறைகிறது.
கணவன் மனைவி இருவருக்குமே எச்ஐவி தொற்று இருந்தால், பாலியல் உறவின் போது பாதுகாப்பு தேவையில்லை
எச்ஐவி தொற்று இருப்பவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். இதில் கணவன் மனைவி இருவருக்குமே எச்ஐவி தொற்று பாதிப்பு இருக்கக்கூடும். எனவே ஏற்கனவே எச்ஐவி தொற்று இருக்கிறது, பாலியல் உறவின் போது ஆணுறை, உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டும், பாதுகாப்பு இல்லாமல் உடலுறவு மேற்கொள்ளலாம் என்று நினைப்பார்கள். ஆனால் இது தவறான கருத்து. எச்ஐவி தொற்று பல விதமான வேரியண்டுகள் மட்டும் ஸ்ட்ரைன்கள் உள்ளன. எனவே எச்ஐவி தொற்று இருவருக்கும் கட்டுப்படுத்தப்பட்டு ஆரோக்கியமாக இருக்கும் நிலையில் பாதுகாப்பற்ற உடலுறவு மேற்கொள்ளும் போது மீண்டும் தொற்று தீவிரமாகும் அபாயம் இருக்கிறது. இதன் மூலம் வேறு சில பாலியல் நோய்களும் உண்டாகும் சாத்தியம் இருக்கின்றது. எனவே பாதுகாப்பு தேவையில்லை என்ற எண்ணம் தவறானது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:HIV, WORLD AIDS DAY