Home / News / explainers /

Sri Lanka State of Emergency: அவசரநிலை பிரகடனம் என்றால் என்ன? குடிமக்களை எப்படி கட்டுப்படுத்தும்

Sri Lanka State of Emergency: அவசரநிலை பிரகடனம் என்றால் என்ன? குடிமக்களை எப்படி கட்டுப்படுத்தும்

இலங்கையில் அவசரநிலை பிரகடனம்

இலங்கையில் அவசரநிலை பிரகடனம்

கடந்த 2019ம் ஆண்டு, ஏப்ரம் மாதம் 21ம் தேதி நடைபெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, அவசரகால நிலைமையை அப்போதைய ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனா பிரகடனப்படுத்தினார்.

வரலாறு காணாத அளவில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இந்த நடைமுறை நேற்று முதல் (ஏப்ரல் 1) இலங்கை முழுவதும் நடைமுறைக்கு வந்தது.

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உணவு, எரிபொருள், எரிவாயு, மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல மாகாணங்களில் மின்சார பற்றாக்குறை காணப்படுகிறது. இதனையடுத்து, நாடு முழுவதும் அரசுக்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள் வலுப்பெற்றுள்ளன. நேற்று, அந்நாட்டின் அதிபர் மாளிகையின் முன்பு ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையால் பலர் காயமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 10க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்நாட்டின் அதிபர் கோட்டாபயா ராஜபக்ஷ அவசரநிலையை பிரகடனப்படுத்தினார்.

அவசர நிலை பிரகடனம் என்றால் என்ன?

இலங்கையின் பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளை சட்டமானது, தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் அத்தியாவசிய தேவைகள் ஆகியவற்றை பேணும் பொருட்டு அவசர கால நிலையை பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதியினை அனுமதிக்கின்றது.  பொதுவான சந்தர்பங்களில் அனுமதிக்கப்படாத பல்வேறு சிறப்பு அதிகாரங்களை, அவசர நிலை பிரகடனம் அரசாங்கத்திற்கு  வழங்குகின்றன.

இலங்கை அரசியலமைப்பு உத்தரவாதம் செய்துள்ள அடிப்படை உரிமைகள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதிக்கலாம். கருத்து தெரிவிப்பதற்கான உரிமை, ஒன்று கூடுவதற்கான உரிமை, நடமாடுவதற்கான உரிமை, தொழில் புரிவதற்கான உரிமை, மதம் மற்றும் கலச்சாத்திற்கான உரிமை போன்றவைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க முடியும். பொது மக்களை கைது செய்வதற்கான அத்துனை பொது அணுகுமுறையும் (பிடி ஆணை இல்லாமல் யாரையும் கைது செய்யலாம்) ரத்து செய்யலாம். சந்தேகிக்கும் நபரை கைது செய்யலாம் ( பாதிக்கப்பட்டவர் தான்  குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும் ). மேலும், இந்த அவசரநிலைப் பிரகடனத்தை நீதிமன்ற சவாலுக்கு உட்படுத்த முடியாது.

சுருங்க சொன்னால், சட்டம் ஒழுங்கு பாதுக்காக்க அந்நாட்டின்  ராணுவத்திற்கு  முழு அதிகாரம் இதன் மூலம் வழங்கப்படும்.

377

 

கோட்டாபயா ராஜபக்ஷா

நாடாளுமன்ற ஒப்புதல் தேவை:

தற்போது கையெழுத்திடப்பட்ட அவசர நிலை பிரகடனம், 30 நாட்களுக்கு (ஒரு மாதம் காலம்) செல்லுபடியாகும். இதனை அந்நாட்டின் பாராளுமன்றம் 14 நாட்களுக்குள் அனுமதிக்க வேண்டும். இல்லையெனில், பிரகடனம் இல்லா நிலையென ஆகும். தற்போது, இலங்கை பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ஷே தலைமையிலான அரசு தனிப்பெரும்பான்மையுடன் இருப்பதால் அனுமதி எளிதாக கிடைத்து விடும் என்று கணிக்கப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடைபெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, அவசரகால நிலைமையை அப்போதைய ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனா பிரகடனப்படுத்தினார். இதனை, இலங்கை பாராளுமன்றம் வாக்கெடுப்பின்றி ஒருமாத காலத்துக்கு அனுமதி அளித்தது. அதன்பிறகு, நான்கு மாத காலத்துக்கு இந்த பிரகடன ஒழுங்கு விதிகளை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் ஜனாதிபதி நீட்டித்து வந்தார்.

இலங்கையில் பொருளாதாரம் சீர்குலைய என்ன காரணம்? அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்...

இந்த நான்கு மாத காலத்தில் அந்நாட்டின் பிரஜைகள் மீது பல்வேறு உரிமை மீறல்கள் தொடுக்கப்பட்டதாக அயல்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நாட்டின் பல பகுதிகளில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. ஈஸ்டர் தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடையவர்களில் பெரும்பாலானோர்  கொல்லப்பட்டதாகவும், பலர் கைது செய்யப்பட்டதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்தது.

அவசர நிலை பிரகடனத்தால், அந்நாட்டின்  சுற்றுலாத் துறை அகலபாதாளத்துக்கு சென்றது. வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில்  70% வரை குறைந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடிக்கு காரணம் தான் என்ன?

புடவை மற்றும் பட்டுத்தொழில்  ஏற்றுமதி, வெளிநாட்டுப் பணியாளர்கள் ஏற்றுமதி, சுற்றுலாத் துறை ஆகியவை இலங்கையின் அந்நிய செலவாணி  கையிருப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சுற்றுலா துறையின் போக்கு

ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு முந்தைய காலகட்டங்களில் சராசரியாக 1.5 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கை தீவுகளுக்கு பயணித்து வந்தனர். ஆனால், தாக்குதலுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை கணிசமாக குறையத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து வந்த கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு நாட்டின் உள்நாட்டு உற்பத்தியைக் கடுமையாக பாதித்தது. இதனால், அந்நிய செலாவணி கையிருப்பு பெருமளவில் குறையத் தொடங்கியது.

அந்நிய செலாவணி கையிருப்பு

உள்நாட்டு யுத்தம் முடிவுற்ற பின்னரும் தொடர்ச்சியாக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், மத மற்றும் இன சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரித்து வரும் சர்வதிகார போக்கு ஆகியவை நாட்டின் அன்றாட பிரஜைகளை கையறு நிலைக்குத் தள்ளியது. சுற்றுலாத் துறையின் மீது ராணுவத்தின் செல்வாக்கு உள்ளூர் மக்களின் உள்ளூர் மக்களின் பிரதான வருவாயை தடுப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது .

சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் எதிர்மறையான விளைவுகளை சந்தித்துள்ளது.

சீனா போன்ற அந்நிய நாடுகளின் முதலீடுகள், கணிசமாக வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார ரீதியில் வருமானத்தை வழங்கவில்லை. மாறாக, அது இலங்கையின் கடன் சுமையை மேலும் அதிகப்படுத்தியது. உதாரணமாக, சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுக (Hambantota International Port) செயற்திட்டம் அந்நாட்டிற்கு பெரும் கடனை ஏற்படுத்தியது.  அதன் விளைவாக, இலங்கை அந்த துறைமுகத்தை சீன நிறுவனங்களுக்கு 99 ஆண்டுகால  குத்தகைக்கு வழங்கியது.

Tags:Explainer, Srilanka