சமூக வலைதளங்களில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறும் கருத்துக்கள் கவனம் பெறும். அவ்வப்போது சர்ச்சைக்களுக்கும் உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நகைச்சுவை நடிகர் பாஸ்கி பேசிய காணொலியை முன்வைத்து தனது சமூக வலைதளத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.
இதுதொடர்பாக ஜேம்ஸ் வசந்தன் தனது பேஸ்புக் பக்கத்தில், “நகைச்சுவையாளர் பாஸ்கி பேசிய ஒரு காணொலிப் பகுதியை ஒருவர் அனுப்பியிருந்தார். பார்த்தேன், சிரித்தேன், அவர் நகைச்சுவை உணர்வை எப்போதும் போலவே ரசித்தேன். அது எந்த விதத்திலும் என்னைப் பாதிக்கவில்லை. மாறாக, ஒரு உண்மையை நினைவூட்டியது என்றே சொல்லலாம்."Creativity-யில் பிராமணர்தான் supreme community" என்கிறார். அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.செவ்விசை வாய்ப்பாட்டு, வாத்திய இசை, திரைப்பட இசையமைப்பு, வாத்தியக் கலைஞர், பின்னணிப் பாடகர், பாடகியர், இயக்குநர், நடிகர், நடிகையர், விளையாட்டுத் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, அறிவியல், பொருளாதாரம், நீதித்துறை என எல்லாவற்றிலும் தலைசிறந்து விளங்குபவர் பெரும்பாலும் பிராமணரே” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது எல்லோர்க்கும் தெரிந்ததுதானே? அதை அவர் சொல்லும்போது எந்த அடிப்படையில் மறுக்கமுடியும்? ஏன் மறுக்கவேண்டும் என்று கேள்வியையும் முன்வைத்த அவர், “அது எனக்குக் கோபத்தையோ, வெறுப்பையோ வரவழைத்தால் அது என் கையாலாகாத்தனம். அவர்களோடு போட்டியிட நான் என்னைத் தயார்செய்து கொள்வேன், அல்லது ஒதுங்கிவிடுவேன். அவர்களிடமிருந்து நான் பல நல்ல அம்சங்களைக் கற்றுக்கொள்கிறேன். இதைத்தாண்டி, அவர்கள் மற்றவர் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கின்றனர் என்ற ஒரு குற்றச்சாட்டு காலங்காலமாகவே உண்டு. அதில் எனக்கு முழுவதும் உடன்பாடில்லை. அவர்களுக்கென சில பலங்கள் உண்டு. தங்கள் கருத்துகளைத் தெளிவான விதத்தில் எடுத்துரைக்கும் வல்லமையும், கடுமையான கருத்துகளையும் நயமாக எடுத்து வைப்பதும், பிடிக்காதவரைக் கூட புன்முறுவலோடு எதிர்கொள்வதும், ஒரு கூட்டத்தில் தங்கள் சாமர்த்தியத்தால் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதும், அவமானங்களைத் துடைத்தெறிந்து விட்டு இலக்கில் குறியாக இருப்பதும் சில எடுத்துக்காட்டுகள்” என்று கூறியுள்ளார்.
மேலும், “இந்த பலங்களை அவர்கள் சரியான இடத்தில், சரியான தருணத்தில் வெளிப்படுத்தி வெற்றியடைகிறார்கள். அந்த உத்திகளை நாம் பயின்றுகொள்ள வேண்டும். இயலாவிட்டால் நம் பாணியில் அமைதியாகத் தொடரவேண்டும். எனக்கு வேகமாக ஓடும் திறமை இருக்கவேண்டும், அல்லது அதை வளர்த்துக்கொள்ள வேண்டும். என்னை விட வேகமாக ஓடக்கூடியவனை நான் எப்படிக் குற்றப்படுத்த முடியும்? குறுக்கே வந்து இடைமறிப்பவனையோ, தள்ளிவிட்டு ஓடுபவனைப் பற்றியோ நான் பேசவில்லை. அவன் யாரயிருந்தாலும் தப்பானவன்தானே?” என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாஸ்கி நிகழ்ச்சி ஒன்றில், “கிரியேட்டிவிட்டிக்கு பெயர் போன பிராமின் கம்யூனிட்டி தான் உலகத்திலேயே சுப்ரீம் கம்யூனிட்டி. அதுல எந்த சந்தேகமும் இல்லை” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Tamil cinema news