எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் துணிவு படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. படத்தின் புதிய அப்டேட்கள் குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ள நிலையில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக நேற்று நள்ளிரவு துணிவு படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது. போஸ்டரில் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு மாஸ் அஜித்தாக இருக்கிறார். அஜித்தின் புதிய ஸ்டில்லை அவரது ரசிகர்கள் ட்ரெண்டு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு இயக்குநர் வினோத் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் திரைப்படம் குறித்தும் அஜித் குறித்தும் பல்வேறு தகவல்களை கூறியுள்ளார். அவர் தனது பேட்டியில் கூறியதாவது, "ஒரு பெரிய ஸ்டார் ஹீரோவை வைத்து படம் எடுக்கும் போது அதற்கு ஏற்றார் போல கதையும் எழுத்தும் இருக்க வேண்டும். இந்த காலத்தில் நல்ல கதை மற்றும் சிறந்த மார்கெடிங் யுக்திகள் மட்டும் போதாது. இவை இரண்டும் பார்வையாளர்களிடம் ஒழுங்காக சென்று சேர்கிறதா என்பதும் அவசியம். பார்வையாளர்கள் பாசிடிவான எண்ணத்துடன் படத்தை அனுகும்படி செய்ய வேண்டும். பொன்னியன் செல்வன், விக்ரம் போன்ற படங்களில் இது தான் நடந்தது. மக்கள் திறந்த மனதோடு படத்தை அனுகி அதை வெற்றிப்படமாக மாற்றிவிட்டார்கள். 'நீ அப்படி என்ன கிழிச்சிட்ட' இந்த மைன்ட்ல பாக்க வரவங்க, என்ன தான நல்ல படம் எடுத்தாலும் அதுல இருக்கம் குறையத்தான் பேசுவாங்க.
பெரிய ஸ்டார்களின் படங்களில் தான் பாக்ஸ் ஆபீஸ் தொடர்பான பேச்சுக்கள் ஆர்வமாக இருக்கும். ஆனால், பாக்ஸ் ஆபிஸ் என்பது ரிலீஸ் தேதியை பொறுத்தது. விடுமுறை நாள்களில் ரிலீஸ் ஆகும் படங்களுக்கும், விடுமுறை இல்லாத நாள்களில் ரிலீஸ் ஆகும் படங்களுக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மாறுபாடு இருப்பது இயல்பு தானே. வலிமை படம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆனது. பிப்ரவரி மாதத்தில் ரிலீஸ் ஆன தமிழ்ப்படங்களிலேயே அதிக வசூலை குவித்த தமிழ்ப்படம் என்றால் வலிமைதான். ஆனால், ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்து பேசுபவர்கள் இது போன்ற காரணங்களை பேசுவதில்லை.
அஜித் சார் சக மனிதர்களிடம் நேயத்துடன் மதித்து நடக்கும் பண்பு கொண்டவர். செட்டில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் தொடங்கி அனைவருக்கும் மரியாதைக்குரிய விதத்தில் நடக்கின்றார்களா என்பதை அவர் கூர்ந்து கவனிப்பார். அவருடன் நான் அரசியல் குறித்து பேசியதில்லை. அரசியல் விவகாரங்களோ, தனிப்பட்ட விவகாரங்களோ அவர் பேசி நான் பார்த்ததில்லை. யாராவது இது போன்ற பேச்சுக்களை எடுத்தால் கூட அவர் கண்ணியமாக அதை நிறுத்தி, இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம் என்று கூறுவார்.
இதையும் படிங்க: வாரிசு பட பாடலின் மேக்கிங் வீடியோவில் இடம்பெறும் சிம்பு… நன்றி தெரிவித்த தயாரிப்பு நிறுவனம்
இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் அஜித் சாருக்கு ஜோடியாக வேண்டும் என்று தேர்வு செய்யப்படவில்லை. அஜித் சார், மஞ்சு வாரியர், அமீர், பவனி ரெட்டி, சிபி புவானா சந்திரன் இவர்கள் எல்லோரும் படத்தில் ஒரு டீமாக நடிக்கிறார்கள். இதில் சமுத்திரக்கனி போலீசாக நடிக்கிறார். இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் தனித்துவமான தன்மை கொண்டவர்கள். அஜித் சார் வயதுக்கு தோதான 40 வயது தோற்றம் கொண்ட நடிகையை தேர்வு செய்ய திட்டமிட்டு மஞ்சு வாரியர் மேடமை தேர்வு செய்தோம்.வலுவான கதாபாத்திரத்தில் அவர் நடிப்பார்கள் என்பது ரசிகர்களுக்கு தெரியும் என்பதால் ரசிகர்கள் அவரை ஆக்சன் ரோலில் பார்க்கும் போது புதுமையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
கமல், தனுஷ் ஆகியோருக்கு கதை சொல்லியிருப்பதாக பேசப்படுகிறதே என்ற கேள்விக்கு எச் வினோத், "படம் ரிலீசுக்கு முன்னர் இது போன்ற பேச்சுக்கள் வருவது இயல்பு. ஆனால் யோகி பாபுவுக்கு தற்போது ஒரு கதை கூறியுள்ளேன். ஆனால் உறுதி செய்யப்படவில்லை. ஒரு அப்பாவி திருடன்,போலீஸ்காரருக்கு இடையே நடைபெறும் நிகழ்வுகளை மையமாக கொண்ட கதைக்களம் இது. யோகி பாபு தான் இதில் முன்னணி கதாபாத்திரமாக நடிப்பார்" என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Actor Ajith, Ajith, Vinoth