சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சர்குஜா மாவட்டதில் வசிக்கும் நமன் ராஜ்வடே என்ற 5 வயது சிறுவனுக்கு போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதியின் காவல் கண்காணிப்பாளர் பாவனா குப்தா இந்த பணி ஆணையை சிறுவனுக்கு வழங்கினார். இதன் பின்னால் ஒரு நெகிழ்ச்சியான கதை உள்ளது.
சிறுவன் நமனின் தந்தை ராஜ்குமார் இதே பகுதியில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்துள்ளார். இவர் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணியின் போதே சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். ராஜ்குமாரின் அகால மரணத்தால் அவரது மனைவியும், அன்று 3 வயது சிறுவனாக இருந்த நமனும் தவித்து வந்தனர். ராஜ்குமாரின் குடும்ப சூழல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாவனா குப்தாவின் கவனத்திற்கு வந்துள்ளது.
உடனடியாக குடும்பத்தை தொடர்பு கொண்டு கவலை ஏதும் வேண்டாம். உரிய நிவாரணங்களை செய்து தருகிறேன் என்று வாக்குறுதி தந்துள்ளார். அதன்படி, 2 ஆண்டுகள் கழித்து தற்போது தனது முயற்சி மூலம் சிறுவன் நமனுக்கு உயிரிழந்த தந்தை செய்த வேலையான கான்ஸ்டபிள் பணியை பெற்று தந்துள்ளார். சிறுவன் நமன் மற்றும் அவனது தாயாரை அழைத்து கையில் பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார் எஸ்பி பாவனா. அத்துடன் இனி நீயும் போலீஸ் தான் என சிறுவனிடம் கூறி உற்சாகப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, விதிகளின்படி, நமனுக்கு 18 வயது நிறைவடைந்தவுடன் தான் கான்ஸ்டபிள் வேலையில் சேர்ந்து பணியாற்ற முடியும். சிறுவனுக்கு எஸ்பி பாவ்னா குப்தா பணி நியமன ஆணை வழங்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி கவனம் பெற்று வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Chhattisgarh, Police