காலம் கெட்டுவிட்டது என்ற விமர்சனம் எல்லா காலத்திலும் முன்வைக்கப்பட்டே வருகிறது. சாக்ரட்டீஸ் காலத்திலேயே, இந்த விமர்சனம் உண்டு. அந்தக்காலத்தில் என்று யார் எதைச் சொன்னாலும் நம்ப வேண்டாம். இவர்கள் சொல்லும் எல்லா காலத்திலும் நியாய, அநியாயங்களும், கலாச்சார மீறல்களும் இருந்து கொண்டுதான் இருந்திருக்கின்றன.
பெண்கள் நாகரிகம் என்ற பெயரில் ஆபாசமான உடைகள் அணிகிறார்கள். அந்தக் காலத்தில் சேலை கட்டி குடும்பப் பாங்காக இருந்தார்கள் என்று தொண்ணூறுகளில் இளமைப் பருவத்தைக் கடந்தவர்களே கூறுகிறார்கள். ஆனால், அது உண்மையா? அப்போது மட்டும் பெண்களின் உடை குறித்து விமர்சனங்கள் இல்லையா? சுமார் 63 வருடங்களுக்கு முன்பு வெளியான பாடலைக் கேட்டால் இது புரியும்.
1960 இல் இவன் அவனேதான் என்ற வித்தியாசமான பெயரில் ஒரு படம் வந்தது. கதையும் வித்தியாசம்தான். இதன் கதையை கதாபாத்திரங்களை வைத்து விளக்குவதே சுலபம். முத்து பட்டிக்காட்டான். அவனுக்கு அத்தை மகள் மாலினி மீது காதல், ஆனால், பணக்கார அத்தை தனது படித்த மகளை படிக்காத முத்துவுக்கு திருமணம் செய்துத்தர முடியாது எனக் கூற, முத்துவின் தந்தை அவனுக்கு அவனைப் போலவே ஒரு பட்டிக்காட்டு பெண்ணை பார்க்கிறார் முத்துவுக்கு அதில் விருப்பமில்லை.
நாடகம் போடும் பின்னணியில் பெண்களை மயக்கி அனுபவிப்பது சுந்தரின் தொழில். மாலினியையும், அவள் சொத்தையும் அடையும் முயற்சியில் கோல் அடிக்கப் போகும் நேரம் மோகன் பந்தை தனது கோர்ட்டுக்கு நகர்த்திச் சென்றதில் அவனுக்கு ரொம்பவே கோபம்.
சுந்தரின் ஆசை வார்த்தையில் மயங்கி அவனுக்கு மனைவியான லட்சுமிக்கு, கணவன் கண்ட பெண்களிடம் எல்லாம் இதே வேலையாக திரிகிறானே என்ற வருத்தம், திருந்துவான், தன் பக்கம் திரும்புவான் என்று அவள் காத்திருக்கிறாள்.
இவர்களுடன் கணவன் இல்லாமல் மாலினியை வளர்த்து ஆளாக்கிய பிரேமாவுக்கும் பல மனக்குறைகள். இவர்கள் அனைவரும் மனநல மருத்துவர் குணபூஷணத்தை நாட, அவர் இவர்களின் கதையைக் கேட்டு, அதற்கேற்ப மருந்தில்லா சிகிச்சை அளித்து அனைவரின் பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பது கதை.
அந்தக் காலத்துக்கு இது வித்தியாசமான கதைதான். ராஷ்மி எழுதிய கதைக்கு கலைப்பித்தன் திரைக்கதை அமைத்து, வசனம் எழுத, பி.ஸ்ரீதர் படத்தை இயக்கினார்.
சகஸ்ரநாமம், உதயகுமார், அம்பிகா (இவர் பத்மினி, ராகினி, லலிதா சகோதரிகளின் ஒன்றுவிட்ட உறவினர்), கே.சாரங்கபாணி, பண்டரிபாய், தேவிகா, எஸ்.என்.லட்சுமி ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருந்தனர்.
ரங்காராவ் இசையில் தஞ்சை ராமையா தாஸ், எம்.எஸ்.சுப்பிரமணியம், கலைப்பித்தன்,வில்லிபுத்தன், கோவை சபாபதி ஆகியோர் பாடல்கள் இயற்றினர். அதில் தஞ்சை ராமையா தாஸ் எழுதிய தேவி ஜெகன் மாதா மிகப் பிரபலம். பி.சுசீலா, பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடியிருந்தனர்.
தேவி ஜெகன் மாதா
உந்தன் திருவுள்ளம் இரங்காதா
சரண் புகுந்திட மலர் பாதம் - அருள்
காவியக் கலையே
கனிந்திடும் நிலையே
வாழ்வினில் ஒளிவீசும்
வளர்மாமதி வனிதா மணி மறவேன் யினி... என்று பெண் பாட,
காட்டுப் பூச்சி போல
நீ வீட்டுக்குள் தன்னாலே
கலிகாலத்திலும் கன்ட்ரியாக
வாழ்வதும் பிடிக்கலே...
நாகரிகமில்லா கர்நாடகி
காலம் தெரிஞ்சு நைலான் சேலை கட்டணும்... என்று ஆண் அட்வைஸ் பண்ண,
ஐய்யையோ கண்ணாடி போல் உடம்பை ஏனுங்க காட்டணும் என்று பெண் பதற, இப்படியே கேள்விப் பதிலாக அந்தப் பாடல் செல்லும். இறுதியில்,
ஹாஜி ஆவோ ஆவோ
கியா கானா கியா கானா
அப்டுடேட்; பேஷன்
ஹனிமூன் சீசன்
ஹலோ மைடியர்
லவ்வுக்கேது ரேஷன்... என்று வாலியைத் தாண்டி ஜாலி செய்திருப்பார் தஞ்சை ராமையா தாஸ்.
பல சுவாரஸியங்கள் கொண்ட, இவன் அவனேதான் வெளியான போது நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் காப்பி இப்போது எங்கேயும் இல்லை. காலத்தில் கரைந்து போன பல திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
1960 மார்ச் 25 வெளியான இவன் அவனேதான் இன்று 63 வது வருடத்தை நிறைவு செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Classic Tamil Cinema